பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 51


பழக்கங்கள், வழக்கங்கள் ஊழாக உள்ளத்தினின்றும் முகிழ்த்து வருகின்றன: மனிதன் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவன்; எளிதில் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டான். “பழக்கம் தவிரப் பழகுமின்” என்று ஆன்றோர் கூறியும் நமது வாழ்க்கைத் தடம் மாறவில்லை! ஆனால் தோல்விகள், துன்பங்கள், துயரங்கள் இவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அறைகூவலாக ஏற்றுக்கொண்டு, நாள்தோறும் உழைப்பின் அளவும் திறமும் தரமும் கூடினால் தான் பழக்கங்களை - வழக்கங்களை மாற்ற இயலும்; மாற்ற முடியும். இதனைத் திருக்குறள்,

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.”

(620)

என்று கூறுகிறது. ஆயினும் நமது நாட்டு மக்களுக்கு ஊழ், தலைவிதி இவற்றின் மீதுள்ள நம்பிக்கை சற்றும் தளரவும் இல்லை; குறையவும் இல்லை.

அதனாலேயே நமது நாடு வறுமையிலிருந்து விடுதலை பெற இயலவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வறுமையை எதிர்த்துப் போர்க்கொடி தாங்கினார் திருவள்ளுவர்.

“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும், நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது”;

(1049)

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

(1062)

என்று கடிந்து கொண்டார்! ஆனால் இன்னமும் நாம் திருக்குறளுக்கு உரையெழுதிக் கொண்டிருக்கின்றோம்! அல்லது விவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்! ஆனால், திருக்குறள் நெறியை வாழ்வியல் நெறியாக்கச் சமூகம் முயலவில்லை.