பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பிறப்பின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைத் திருக்குறள் மறுக்கிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வலியுறுத்துகிறது. ஆனால், இருபதாம் நூற்றாண்டு வரையில் கூட நாம் தீண்டாமையினின்றும், சாதி வேறுபாடுகளினின்றும் விடுதலை பெறவில்லை! திருக்குறள் நெறிக்கு மாறாக நாட்டில்,

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு”

(735)

என்று திருக்குறள் விலக்கிய தீமையே நாளும் வளர்ந்து வருகிறது.

திருவள்ளுவர் திருநாளாகிய இன்று உறுதி எடுத்துக் கொள்வோம்! கற்போம்! நாளும் கற்போம்! அறிவைத் தேடுவோம்! அறிவை வாழ்க்கைக்குக் கருவியாகப் பயன்படுத்தி ஊழின் வலிமையை முறியடித்து வெற்றி பெறுவோம்! வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் நாட்டை மீட்டு “நாடென்ப நாடா வளத்தன” என்ற திருக்குறளுக்கு ஏற்ப நாட்டை அமைப்போம்! எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவோம்! பொறிகளைப் பக்குவப்படுத்திக் கொண்டு வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்! வாழ்க, திருக்குறள்! வளர்க, வள்ளுவத்தின் வாழ்வியல்!