பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4


அழுக்காற்றை அகற்றுவது எப்படி?


திருவள்ளுவர் இனியவை கூறலுக்கு இலக்கணம் வகுத்தவர். ஆயினும் அவர் வகுத்துக் கூறிய விதிமுறைகளுக்கு ஓர் இடத்தில் தாமே கட்டுப்படமுடியாமல் திட்டி விடுகிறார். "அழுக்காறு என ஒரு பாவி” என்று அழுக்காற்றினைத் திட்டுகிறார்! ஆம்! அழுக்காறு அவ்வளவு கொடுமையானது. அழுக்காறு என்றால் என்ன? அழுக்காற்றினால் விளையும் தீமைகள் என்ன? அழுக்காற்றினை அகற்ற முடியுமா? அழுக்காற்றினை அகற்றும் வழிகள் எவை எவை? என்றெல்லாம் சிந்தித்தல் பயனுடைய சிந்தனையாகும்.

அழுக்காறு என்ற தீமை மக்கள் மத்தியில் மக்கள் மொழியில் பொறாமை என்று வழங்கப்படுகிறது. அதாவது தம்மையல்லாத பிறிதொருவர் அடைந்து அனுபவிக்கும் புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு பேறுகளைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத இழிகுணம் பொறாமை. பொறாமை ஒரு தீய பண்பு. அத்தீய பண்பே இயங்கும் நிலையில் அழுக்காறு என்று பெயர் பெறுகிறது என்று கருதலாம். அதாவது மற்றவர் அடைந்துள்ள பேறுகளைச் சிதைக்க,