பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தட்டிப் பறிக்க, அல்லது பழிதூற்றச் செய்யும் முயற்சிகள் அழுக்காறு ஆகும். அழுக்கு ஆறு அழுக்காறு அசுத்தமானது; துய்மையில்லாதது. நெறியல்லாத நெறி. பேறுகள் அடைந்தாரைப் போலத் தானும் அடையவேண்டும் என்னும் எண்ணம் அழுக்காற்று நெறியில் தோன்றும்; ஆர்வமும் முயற்சியும் தலையெடுக்காது. அழுக்காறுடையார் தேளின் கொடுக்கு போலத் தனக்குத்தானே விஷமிட்டுக் கொண்டு அழிவது உறுதி. அதனால் தாம் அடைய முடியாததை அடைந்திருப்பவர்களைப் பார்த்துப் பழிகறி, இயன்றால் பறிக்க முயற்சி செய்வது அழுக்காற்றின் இயல்பு. அழுக்காறுடையார் உயர்ந்ததாக உலக வரலாற்றில் சான்றே இல்லை. ஆயினும், அழுக்காறு என்ற இயல்பை அறிந்து உணர்தல் வேண்டும். அழுக்காற்றின் வாயில்களைக் கண்டறிந்து அகற்றுதல் வேண்டும். அழுக்காற்றிலிருந்து விடுபெறுதல் ஒரு தற்காப்பு முயற்சி மட்டும் அல்ல; வளர்ச்சிக்குரிய வித்துமாகும்.

அழுக்காறு இரண்டு களங்களைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் அமைத்துக் கொண்டு தோன்றும். அவற்றுள் சமுதாய அமைப்பு முறையில் உள்ள உடையார்-இல்லாதார் என்ற நிலை. வாய்ப்புக்கள் அனைவருக்கும் உரிமையாக்கப்படாமை ஆகியன அழுக்காற்றைத் தோற்றுவிப்பதில் முதன்மையான களங்கள். மேலும் பேறு பெற்றோரின் அடக்கமின்மையும் எளிமையின்மையும் அழுக்காறு வளர, எரி நெருப்புக்கு எண்ணெய் போலத் துணை செய்யும். நமது நாட்டில் அன்றாடத் தேவைகளாகிய உணவு, உடை, உறையுள் இன்னமும் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. பலர் ஒருவேளை உணவுக்குக்கூட அல்லலுறுகின்றனர். வாய்ப்புக்கள் அனைத்தும் வாழ்வோர் பக்கமே! வாழ் விழந்தோர் மேலும் மேலும் வாய்ப்புக்களை இழக்கின்றனர். அழுக்காறு எங்கும் எல்லாரிடத்திலும் வளர்ந்து வருகிறது. மட்டுமல்ல. பணம், பதவிகளைப் பெற்றவர்கள் .