பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 57



“சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாயென் றவிதா விடுநம் மவரவரே
மூவரென் றேஎம் பிரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந் திரிதவரே”

(திருச்சதகம் 4)

என்ற திருவாசகப் பாடலால் தகுதியில்லாதவரெல்லாம் தகுதிக்கு ஆசைப்பட்டு அடைந்த அவலத்தை விளக்குகிறார்.

அடுத்து, அறவே அழுக்காற்றினின்றும் விலக வேண்டுமானால்,

“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்”

என்ற வள்ளலாரின் வாக்குப்படி ஆன்மநேய ஒருமைப்பாடு கொண்டொழுகி வாழ்ந்திடில் மற்றவர்கள் அடையும் பேறுகள் மகிழ்வையே தரும்; மனநிறைவையே தரும்; தியாக சீலத்தைத் தரும். மற்றவர்களை-அவர் தம் இயல்புகளை உளமாரப் பாராட்டுவதின் மூலம் அழுக்காற்றைப் போக்கலாம். எங்கு நெஞ்சு கலந்த உறவும் பாராட்டும் இருக்கிறதோ அங்கெல்லாம் அழுக்காறு கால் கொள்ளாது. தலை காட்டாது.

அடுத்து, சங்கத் தமிழ் வலியுறுத்தியவாறு, “தனக்கென முயலாது பிறர்க்கென முயலும் நோன்பு”டையாரை அழுக்காறு அணுகாது. ஏன்? பிறர்க்கென முயலும் நோன்புடையார் வாழும் நாட்டில் “இலர்” இல்லை என்று திருக்குறள் கூறுகிறது.

“இவர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்”

(270)

என்பது குறள்.