பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 59


அழுக்காறு உயர் பணிகளைக் கெடுக்கும். துறவிகளும் இதற்கு விதி விலக்கு இல்லை.

அழுக்காறு உடையவனின் மனம், புத்தி முதலியன பிறருடைய குற்றங்களைக் காண்பதிலும் பழிதூற்றுதலிலும் நோக்கமுடையதாயிருப்பதால் அவனுடைய காலமும் சக்தியும் அவற்றிற்கே செலவாகும். தன் முயற்சியில் ஈடுபட மாட்டான். அதனால் அழுக்காறுடையான் முன்னேறுவதற்குரிய வாயில்களும் அடைபட்டுப் போகின்றன. ஆதலால் வாழ்வாங்கு வாழ ஆசைப்படுகிறவர்கள் அழுக்காறு கொள்ளலைத் தவிர்க்க வேண்டும்.

அழுக்காறு தீது; முற்றிலும் தீது; மனித சமூகத்தை அழிக்கும் தீய சக்தி, பாவத்தின் உருவம். ஆதலால் அழுக்காற்றினை அறவே நீக்குக, விலக்கு. பெற்றது கொண்டு மன நிறைவு பெறுக. பெறாதவைகளை அடைய முயலுக; குறுக்கு வழிகள் வேண்டாம்.

அழுக்காறு சுயமரியாதையையும் கெடுக்கிறது. வாழ்க்கையில் யாதொரு பணியும் செய்யாமல் பழிதூற்றியே வாழ்வதால் எவரும் நம்பமாட்டார். “பொறாமைப் பிண்டம்” என்று பழிப்பர்; ஒதுங்குவர். இதனால் மானம் போகும்; செல்வம் கெடும்; சுற்றத்தை இழக்க நேரிடும். அதனால் அழுக்காறு கொடிது; கொடுமையிலும் கொடுமையானது.

அழுக்காறு அகன்றால் பல பண்புகள் வளரும். அழுக்காறு அழுக்காற்றினைத் தோற்றுவித்தும் வளர்த்தும் கேடு செய்யும். அவா, அவா நிறைவேறாமையினால் பெறும் சினம், சினத்தின் காரணமாக மொழியும் கடுஞ்சொற்கள் - ஆகியவைகளை அறவே அகற்றுவோம்! பிறர் நலம் பேணுவோம்; முயற்சியுடன் வாழ்வோம்.