பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5


[1]திருக்குறளில் அரசியல் சமூகவியல்


மனித குலம் உய்வதற்காக இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் திருக்குறள் இயற்றப் பெற்றது. இன்று திருக்குறள் ஒரு சிறந்த இலக்கியம் என்றே பலர் கருதுகின்றனர். இது உண்மையேயானாலும் திருக்குறள் ஒர் இலக்கியம் மட்டுமல்ல. திருக்குறள் பல்துறை தழுவிய ஒரு முழுநூல். திருக்குறளை இலக்கியமாகக் கருதிப் பாராட்டிக் கொண்டு வந்தாலும் திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல; அறநூல்; நீதிநூல். ஏன்? அறிவியல் சார்ந்த ஒரு நூல். ஆனால், திருக்குறளை இதுவரையிலும் யாரும் அறிவியல் பார்வையில் பார்க்கவில்லை. திருக்குறள் "இந்திய நீதிநூல்களில் மிகச் சிறந்தது” என்று சர் ஆல்பர்ட் சுவைட்சர் கூறினார். டாக்டர் ஜியூ போப் திருக்குறளைப் படித்து அனுபவித்து ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தார்.

திருக்குறளைப் போற்றித் திருவள்ளுவ மாலை என்று ஒரு பாராட்டு மாலை எழுந்தது. சங்க கால அறிஞர்கள் திருக்குறளைப் பலபடப் பாராட்டியுள்ளனர். இறையனார் என்பவர் ஒரு புலவர். இறையனாரை மதுரை ஆலவாயண்ணல் என்று கூறுவாரும் உண்டு. திருக்குறள் காலங்கடந்தும் நின்று விளங்கும்; "கற்கக் கற்க என்றும்