பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 63



திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஒரு அரசியல் நூல்; சமூகவியல் நூல், திருக்குறளுக்கு முன்பு பல அரசியல், சமூக பொருளாதார நூல்கள் தோன்றியுள்ளன. இவ்வகை நூல்கள் செய்தவர்களில் கன்பூஷியஸ் (கி.மு. 557-478), பிளேட்டோ (கி.மு. 427-347), அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322), சாணக்கியர் (கி.மு. 323-272) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இந்த அரசியல் ஞர்னிகளில் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர். சீன தேசத்தைச் சேர்ந்தவர் கன்பூஷியஸ். இந்தியாவின் வடபுலத்தைச் சேர்ந்தவர் சாணக்கியர். இவர் மெளரிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர். அரிஸ்டாட்டில் மகா அலெக்ஸாண்டருக்கு ஆசிரியர்.

திருவள்ளுவருக்கு முன்பு தமிழ்நாட்டில் திருக்குறள் போல ஒரு அரசியல் சமூக, பொருளியல் நூல் தோன்றிய தில்லை. ஏன்? உலகில் மற்ற நாடுகளை விடத் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு வரலாற்றுக் காலந்தொட்டே குறைவுதான்! அந்த நிலை இன்னும் தொடர்வது வருந்தத்தக்கது. திருக்குறளுக்கு முன் உலக அரங்கிலும் இந்திய நாட்டளவிலும் பல அரசியல், சமூக, பொருளாதார நூல்கள் தோன்றியிருந்தாலும் திருக்குறளைப் போல அவை அறந்தழிஇய அரசியல் கூறவில்லை. மக்கள் நலந்தழிஇய அரசியல் சொல்லவில்லை என்பது அறிந்தோர்கூறும் உண்மை. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும் பிளேட் டோவின் குடியரசும் அரசனின் ஆதிபத்தியத்தை அரண் செய்வன. ஆனால் திருக்குறள் மனித உரிமைகளையும் மக்கட் சமுதாய நலன்களையும் காத்து நிற்பது.

திருக்குறள் தனி மனிதன், குடும்பம் முதலியவற்றை மையமாகக் கொண்ட அறத்துப்பாலை முதலாவதாகவும் மக்களை மையமாகக் கொண்ட சமுதாயம், அரசியல், பொருளாதார இயல்புகளைக்கொண்ட பொருட்பாலை இரண்டாவதாகவும் நல்லதொரு சமுதாயத்திற்கு