பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 65


பொருட்பாலை இயக்கு கின்றார். ஆயினும், பொருட்பால் இயக்கத்தின் முடிவில் சமுதாயம்-அன்று வாழ்ந்த சமுதாயம்-திருவள்ளுவர் வழித் தடத்தைப் பின்பற்றி வராமையின் காரணமாக மனநிறைவு பெறாத நிலையில் பொருட்பாலைக் கயமை அதிகாரத்தில் முடிக்கின்றார்.

ஆயினும் மனிதத்தின்பால் திருவள்ளுவருக்கு உள்ள ஈடுபாட்டால் புதியதோர் தலைமுறையையாவது தம் வழிக் காண விரும்பி, காமத்துப்பால் செய்கின்றார். சிலர் இதனை இன்பத்துப்பால் என்றும் கூறுவர். ஆரிய மாயைக் கலாச்சாரப் படையெடுப்பிற்குப் பின்தான் “காமம்” என்ற சொல் கொச்சையாயிற்று. சங்க காலத்தில் “காமம்” என்ற சொல் நல்ல பொருளிலேயே வழங்கப்பெற்று வந்துள்ளது.

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி”

(தொல். நூற்பா. 138)


“காமம் செப்பாது கண்டது மொழிமோ”

(குறுந்தொகை 2)

என்பனவற்றைக் காண்க. காமத்துப்பாலிலும் ஆங்காங்கே அறமும், பொருளும் வலியுறுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றிக் காமத்துப்பாலில்தான் திருவள்ளுவர் அமைதியாகப் பேசுகின்றார்; திருவள்ளுவர் வெகுண்டும் நொந்தும் இயற்றிய குறட்பாக்கள் இல்லை. அது மட்டுமல்ல. திருவள்ளுவர், மக்கள் தம்மை அந்நியராகக் கருதுகிறார்கள் போலும் என்றும், நாம் சொன்னதைக் கேட்கவில்லை போலும் என்றும் கருதி மக்களுடன் ஒன்றிய உறவுள்ள பாத்திரங்கள் வாயிலாகப் பேசுகின்றார். சுவையிலும், பொருளிலும், பேசும் பாங்கிலும் காமத்துப்பால் சிறந்து விளங்குகின்றது. கொச்சைத்தனமில்லாமலும் விரசம் வராமலும் காமம் பற்றிக் கூறும் நூல் திருக்குறளன்றி வேறில்லை.

திருக்குறள் இலக்கிய வடிவில் அமைந்ததொரு அறிவியல் நூல். திருக்குறளின் நிலத்தியல், தாவரஇயல், ளவியல், சமூகவியல், அரசியல், பொருளியல் முதலிய தி.5.