பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பற்றி நிறைய எழுதியுள்ளான். “இன்று நம் முன்னுள்ள ஒரே பணி கூட்டுறவு இயக்கத்தில் மக்களை அணிதிரளச் செய்வதுதான்” என்று மேலும் கூறினான் மாமேதை லெனின். இன்றோ நம்முடைய நாட்டில் கூட்டுறவுத்துறை அலட்சியப் படுத்தப்படுகிறது. ஒரு குடியரசு நாட்டில் மக்களுக்கு நாட்டுப் பற்றும் பொறுப்புணர்வும் கடமை உணர்ச்சியும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஊராட்சிமன்றங்களையும் கூட்டுறவு இயக்கங்களையும் தோற்றுவித்தனர். இன்றோ எதிரிடையான அணுகுமுறை உள்ளது. ஒப்புரவு நெறி பேணும் சமுதாயத்தில் “எல்லாரும் ஒருவருக்காகவும், ஒருவர் எல்லாருக்காகவும்” என்ற சமுதாய ஒழுகலாறு நிலவும். ஒப்புரவு நெறி நிற்கும் சமுதாயத்தில் எடுத்துக் கொள்ளும் உரிமையும் உண்டு; கொடுக்கும் கடமையும் உண்டு. ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நலம் செய்து கொள்ளும் பண்பாடு நிறைந்த வாழ்க்கை அது. ஆண்டான் - அடிமை முறைச் சமுதாயத்தில் தோன்றிய நன்றி, கடப்பாடு என்பன ஒப்புரவுச் சமுதாயத்தில் இல்லை. ஆதலால்தான் உள்ளூரில் பழுத்த பயன் மரத்தையும் மருந்து மரத்தையும் திருவள்ளுவர் ஒப்புரவுக்கு உவமைகளாகக் கூறினார்.

“பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்”;

(216)

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”

(217)

என்றார். பிறர் நலத்திற்காகத் தமக்கு வரும் தீங்கினையும் ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்புணர்வுடன் உதவிகளைச் செய்தல், மருந்து மரமனைய வாழ்க்கையாகும். ஒப்புரவு வாழ்க்கை மலருமானால் உடைமைகளால் - சொத் துடைமைகளால் வரும் அவலங்களும் சீரழிவுகளும் வரா.

திருவள்ளுவர் நேரிடையாகத் தனிச் சொத்துடைமையைக் கூறினார் என்று கூறப் போதிய சான்று இல்லை.