பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 73


“ஊக்கம் உடைமை” என்றே கூறுகின்றார். அதாவது, உழைக்கும் உணர்வே மூலதனம். ஆதலால் திருவள்ளுவர் பிற உடைமையை ஆதரிக்கவில்லை என்றே தெரிகிறது.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”

(1039)

என்பது திருக்குறள். நிலத்தை இல்லாளுக்கு ஒப்பிடுகின்றார். இல்லாளை - மனைவியைக் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விட இயலாது; விடவும் மாட்டார்கள். ஒரோவழி எவனேனும் ஒருவன் அப்படிச் செய்தால் அவன் கயவன்; கீழ்மகன். ஆதலால் நிலம் உழும் தொழிலாளருக்கே உரிமையுடையதாக இருப்பதைத் திருவள்ளுவர் விரும்புகின்றார். அதுபோலவே சுரண்டும் பொருளாதாரத்தையும் மறுக்கின்றார்.

“சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று”

(660)

“தாழ்விலாச் செல்வர்”

(731)

“அழக்கொண்ட எல்லாம் அழப்போம்”

(659)

என்று வரும் திருக்குறள்களும் “பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள” என்று கூறியுள்ளமையும் அறியத்தக்கன. இந்த உலகத்தில் செல்வம் ஓரிடத்திலும் செல்வத்தைத் திரட்டும் அறிவறிந்த ஆள்வினைத் திறன் வேறோரிடத்திலும் இருப் பதைக் கண்டு திருவள்ளுவர் ஆச்சரியப்படுகிறார்.

“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு”

(374)

என்றார். அதுமட்டுமா? உழைக்கும் நல்லவன் ஏழ்மையிலும், உழைக்காது வாழும் ஒருவன் ஆக்கத்திலும் இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் பொது மக்களையும் அரசையும் ஆய்வு செய்யும்படி ஆணையிடுகின்றார்.