பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதிகமாக இருக்கும். காலம் செல்லச் செல்ல அரசியலே இல்லாத - ஆட்சிமுறையே இல்லாத சமுதாய அமைப்பு உருவாகும் என்பது மார்க்சின் கருத்து.

திருவள்ளுவர் பொருட்பாலை இறைமாட்சியில் தொடங்குகின்றார்.

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

(381)

என்கிறார் திருவள்ளுவர். இதனையே சாணக்கியர் “அங்கங்கள்” என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். இவ்விருவரின் கருத்துக்களில் சில வேற்றுமைகள் உண்டு. திருவள்ளுவர் அங்கங்கள் ஆறு என்கிறார். சாணக்கியர் அங்கங்கள் ஏழு என்கிறார். திருவள்ளுவர் அரசைப் பற்றிக் கூறுவதால் அரசை ஒர் அங்கமாகக் கூறவில்லை.

திருவள்ளுவர்,

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு”

(383)

என்று கூறுகின்றார். ஆனால் சாணக்கியர் தாம் கண்ட அரசனுக்கு ஆறு குணங்கள் வேண்டும் என்கிறார். (1) சந்தி, (2) விக்கிரகம், (3) யானம், (4) ஆதனம் (5) சமாச்சிரயம் (6) துவைதீபாவம். இவற்றை முறையே நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், கூட்டல், பிரித்தல் என்று கூறுவார் பரிமேலழகர்.

திருவள்ளுவர் கண்ட ஆட்சி முடியாட்சியே. ஆனாலும் குடியாட்சியில் மக்களுக்குள்ள உரிமைகள் அதில் குறிக்கப்படுகின்றன. முடியாட்சியில் மன்னன் குடிகளைத் தழுவிய அரசு செலுத்த வேண்டும். சர்வாதிகார மனப்பான்மை கூடாது. இதனைக் “கொடுங்கோல்” என்று திருவள்ளுவர் விளக்குகின்றார். அடுத்து அரசை,