பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 79


அரசாட்சியை விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும். திருவள்ளுவர் இந்த உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

“இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்”

.

(448)

அரசை, குறைகண்டவிடத்து இடித்துக் கூறுவார் இல்லையாயின் அரசு கெடும் என்கிறார். மேலும்

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு”

(389)

என்றும் கூறுகின்றார். மக்களின் விமர்சனம் கேட்க முடியாத அளவுக்குச் செவி கைக்கக் கூடியதாக அமையினும் நாடாளும் அரசனுக்குக் கேட்கும் பொறுமை வேண்டும் என்பது கருத்து. நாட்டை முறையாக நெறிமுறை பிறழாமல் அரசன் ஆட்சி செய்யாவிடின் அவன் அரச பதவியை இழக்கக்கூடிய நிலையும் வரும். அதாவது மக்கள் அந்த அரசை அக்ற்றுவார்கள் என்பது கருத்து.

“கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு”

(554)

என்பது திருக்குறள். உலகில் சில நாடுகளில் அரசன் தெய்வத்தின் பிரதிநிதி என்ற நம்பிக்கையிருந்தது. அரசனின் ஆணை தெய்வத்தின் ஆணைபோலக் கருதப் பெற்றது. ஆனால், திருவள்ளுவர்,

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”

(388)

என்று உபசார வழக்காகக் கூறுகிறார். அதாவது மன்னவன் இறையல்லன்; இறை என்று வைக்கப்பெறும் என்பது கருத்து. \

அரசின் அங்கங்கள் பற்றி முன்பு பேசினோம். அரசின் அங்கங்களுள் ஒன்றாக அமைச்சை எடுத்துக் கூறியிருப்புதற்குப் பழந்தமிழக அரசுகளில் ஐம்பெருங்குழு,