பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எண்பேராயம் முதலிய குழுக்கள் இருந்தன என்று வரலாறு கூறும்.

திருவள்ளுவர், நாடாளும் அரசன் காட்சிக்கு எளியனாக இருக்க வேண்டும்; இனிய சொற்கள் கூறுபவனாக இருக்க வேண்டும்; கொடையாளனாக விளங்குதல் வேண்டும் என்று கூறுகின்றார். தமிழ்நாட்டு அரசர்கள் கொடைமடம் மட்டுமே படுவர்; படைமடம் பட மாட்டார்கள் என்று சங்க இலக்கியம் கூறும். அரசன் கருணையுடையவனாக இருக்க வேண்டும். அரசன் தனது குடிகளைப் பாதுகாத்துப் பேணுபவனாக விளங்குதல் வேண்டும்.

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி”.

(390)

அரசன் கல்வியிற் சிறந்து அறிவுடையோனாக விளங்க வேண்டும். திருவள்ளுவர் கல்வியை அரசியலில் வைத்ததற்குக் காரணம் இரண்டு. ஒன்று நாடாளும் அரசனுக்குக் கல்வி இன்றியமையாதது என்பது. இதைச் சாணக்கியரும் கூறுகின்றார். இரண்டாவது நாடாளும் அரசன் தனது குடிமக்களைக் கல்வி அறிவில் தேர்ச்சியுடையவர்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது. மக்களுக்குக் கல்வி தருவது அரசனின் கடமை; அரசனின் பொறுப்பு.

நாடாளும் அரசன் மற்ற அறிஞர்கள் வாயிலாக ஆட்சித்திறன் நுட்பங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அரசன் ஒரோவழி தவறு செய்யும் சூழல் ஏற்படின் ஒழுக்கமுடையார் மாட்டு அவன் கேட்ட சொல் அவனைத் தவறு செய்யாமல் காப்பாற்றும் என்பது திருக்குறள் கருத்து.

“இழுக்க லுடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”.

(415)