பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து”

(907)

என்றும் கூறுகிறார். இதனால் பெண்ணடிமைத் தனத்தைத் திருவள்ளுவர் ஆதரித்தார் என்பது பொருளன்று. நாடாளும் அரசன் ஆட்சித் திறனுக்குரிய நுட்பங்களும் கல்வியறிவும் இல்லாத மனையாளுக்கு அஞ்சி நடத்தல் கூடாது; அரசியல் நடத்தக் கூடாது என்பது திருவள்ளுவர் கொள்கை. அதுபோலவே வரைவின் மகளிரும். வரைவின் மகளிருக்கு அன்பு கடுகளவும் இல்லை. பணமே அவர்களது குறிக்கோள். அந்தக் காலத்தில் அப்படி ஒரு வடிகால் தேவைப்பட்டிருந்திருக்கும் போலும். அதுபோலவே நாடாளும் அரசன் கள்ளும் குடிக்கக் கூடாது; சூதாடக்கூடாது. பசிக்கு உண்டு, உண்டது செரித்த பிறகு உண்ண வேண்டும். நாடாளும் அரசனுக்கு ஆகாத பழக்கங்களைக் கள்ளுண்ணாமை, சூது எனப் பல அதிகாரங்கள் கூறி விலக்குகின்றார். நாடாளும் அரசன் நன்னெறி நின்றொழுக வேண்டும் என்பது திருவள்ளுவரின் அரசியல் நெறி.

திருவள்ளுவர் பிறப்பினால் உருவான பிற்காலச் சாதிமுறையை ஏற்றுக் கொண்டாரில்லை. ஆயினும் குலம், குடி ஆகியன திருவள்ளுவரால் அங்கீகரிக்கப்படுகின்றன. நாட்டு மக்கள் நல்லவர்களாக இருந்தால்தான் அரசு சீராக இயங்க முடியும். நாட்டின் குடிமக்கள் இயல்பு எப்படி அமைய வேண்டும் என்ற செய்தியைக் குடிமை அதிகாரத்தில் விதித்துக் கூறுகிறார். நாட்டுக் குடிமக்கள் சொல்லும் செயலும் மாறுபடாத நிலையினராக இருத்தல் வேண்டும். பழி பாவங்களுக்கு அஞ்சியவர்களாக இருக்க வேண்டும். பிறரை இகழாமையும் ஈகையும் இன்சொல்லும் உடையவ ராகவும் வறுமையுற்ற பொழுதிலும் பண்பின் தலைப்பிரியாத வராகவும் இருப்பர் சிறந்த குடிமக்கள்.