பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 85


நற்குடிப் பிறந்தார் பணிவுடன் விளங்குவர். மானம் என்பது ஒழுகலாறு தொடர்புடையது. ஆனால் இன்றோ பெரு வழக்காக “மானம்” என்பது மற்றவர் மதிக்காமையே என்று பேசப் படுகிறது. நாட்டு மக்கள் ஒழுகலாற்றை உயிர் போலப் பாதுகாக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கொலையும் கொள்ளையும் இருக்கும். நாடு அல்லற்படும். அதனால் நாட்டு மக்கள் நன்னெறி சார்ந்த ஒழுகலாற்றைப் பேணவேண்டும். அதேபோழ்து பொய்மையான மானம் கருதி ஒரு குடிக்குள் உள்ள ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடாது. உற்றார், உறவினரிடையே பெருமை பாராட்டு தலினால் குடி, கெடும். அதனால்,

“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”

(1028)

என்றார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் நெறியில் சாதிகள் இல்லை. குடி செயல் வேண்டும்; ஒருவருக்கொருவர் உற்றாராகி, உறவினராகி, மதிப்பு - அவமதிப்புப் பாராமல், பெருமை - சிறுமை பாராமல் தம்மைச் சார்ந்த குடிமக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இங்ங்ணம் தாம் பிறந்த குடியின் மேம்பாட்டுக்கு உதவி செய்பவர்களே பெருமைக்குரியவர்கள். உயிர் வாழ்தலுக்குச் சான்று, பிறரால் செய்ய இயலாத காரியங்களைச் செய்தலேயாம். எச்செயலும் செய்யாதிருத்தல் சாவை நிகர்த்தது. திருவள்ளுவர் நெறியில் பிறப்பில் அனைவரும் சமமே. சிறப்புடைய தகுதிகளால் சிறப்பான தொழில்கள் செய்திருந்தாலும் அச்சிறப்புக்காக எந்த ஒரு தனித் தகுதியும் பெறுதற்குரியரல்லர். சாத்திரம் கற்றோராயினும் சந்தி பெருக்குவோராயினும் ஒரு குலத்தவரேயாம்; ஒரே தகுதியுடையவரேயாம். வரலாற்றின் நிற்கத்தக்க அருமை யுடைய செயல்களையே செய்வர் பெரியர். பெரியோருக்குரிய