பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாய்ப்புக்கள் சிறியோரிடம் வாய்த்துவிடின் மிகவும் தருக்கி நடப்பர். பெருமையுடையவர்கள் மற்றவர் குற்றங்களைக் காணார். கண்டாலும் அதை மறைத்து விடுவர்.

நற்குணங்களில் சிறந்து விளங்குவோர் சான்றோர்கள். செய்யத் தக்கன அறிந்து செய்பவர்கள் சால்புடையவர்கள். தகுதியில்லாதார் மாட்டும் தோல்வியை ஏற்றுக் கொள்ளுதல் சால்பின் இயல்பு. சராசரி மனிதர்கள் தகுதி மிகுதியும் உடைய பெரியோர் மாட்டுத் தோற்பதை வரவேற்பர். தமக்குக் கீழ்ப்பட்டவர்களிடத்திலும் தோல்வியைச் சகித்துக் கொள்வார்கள். இந்த அடிப்படையில்தான் “குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும்” என்ற பழமொழி பிறந்தது. சான்றாண்மையுடையோர் எல்லாருக்கும் நன்மையே செய்வர். சான்றாண்மையுடையவர்கள் வறுமைக்கு ஆளாகி இருப்பதைக் கண்டு ஒருபொழுதும் நானார். இத்தகு சான்றோர்கள் திருக்குறட் சமுதாயத்தில் பல்கி இருந்தனர் என்பது புலனாகிறது. அதுபோல வறுமையுடையோரும் பலர் இருந்திருக்கிறார்கள்.

பண்பாடு, செயல் அடிப்படையில் வருவது. இன்றளவும் இந்த உலகம் இயங்கி வருதற்குக் காரணம் பண்புடையோர் பலர் வாழ்வதினால்தான்! “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” என்பது திருக்குறள். திருவள்ளுவர் ஓர் அதிசயமான செய்தி கூறுகிறார். பகலில் இருள் வந்து சூழ்ந்துவிட்டதாம். யாருக்கு: நெஞ்சில் பகை கொண்டு, கண்டும் காணாமல் நகைத்துப் பேசிக் கலந்துரையாடி மகிழாமல் செல்பவருக்குப் பகலும் இருளாம்.

பண்பில்லாதவனிடத்தில் செல்வம் இருக்காது. ஒரோ வழி விபத்து காரணமாக இருப்பின் நஞ்சு கலந்த பாலாம். அச்செல்வம் நன்றியில் செல்வம். பொருள் ஒரு கருவி, பொருள் ஒரு வாழ்க்கைச் சாதனம்; அவ்வளவுதான். எல்லாமே பொருளால் உண்டாகும் என்று நம்பிப்