பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 16


நாவடங்கி ஒழுகிட நின் திருநாமத்தைப் படைக்கலமாகத் தந்தருள்க!


இறைவா, நான் என்ன செய்ய? நா, சுவையான தீனி கேட்கிறது. அது பேச்சுக் கச்சேரியைத் தொடங்கி விட்டால், கேட்கத்தான் ஆளில்லை. நேரமில்லை. நேரம் மட்டுமா இல்லை; வரம்பே இன்றிப் பேசுகிறது! நானும் அடக்கத்தான் பார்க்கிறேன். மெளன விரதம் இருந்து பார்த்தேன். அது மெளன விரதமா? நா, மற்றப் பொறிகளையும், எழுதுகோலையும் எழுதும் தாளையும் தன் படைக்கருவிகளாகக் கொண்டு ஆட்டுவித்த ஆட்டம் தாங்கமுடியவில்லை. இறைவா, என்ன செய்யச் சொல்கிறாய்? ஆம், இறைவா! நாவை அடக்குதற்குப் பதில் அதை நல்ல வழியில் பழக்க முயற்சி செய்கிறேன். நீயும் துணை செய். நாவடங்கினால் போதும், அனைத்தும் நடக்குமே.

திருவள்ளுவர் "யாகாவாராயினும் நாகாக்க” என்றார். ஒரோ வழி உடம்பிற்குள் - வாய் வழியாக அசுத்தமான உணவு சென்றாலும் உடல் கெடுவதில்லை. ஆம், சிறுகுடல் அசுத்தத்தைப் பிரித்து மலக்குடலுக்கு அனுப்பிக் கழித்துவிடும். ஆனால், வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் அசுத்தமாக இருந்தால்-தப்பாமல் அதன் எதிர்விளைவுகளை உருவாக்கியே தருகிறது. ஆதலால், நாவடக்கமே வேண்டும், உள்ளே செலுத்தும்-உணவிலும் அடக்கம் வேண்டும்.

சுவைக்காக நாக்கை நீட்டி உண்டால் நோய்க்கு விருந்தாவதைத் தவிர வேறு வழியில்லை! அது போலவே நாவிலிருந்து வெளியே வரும் சொற்களிலும் கட்டுப்பாடு தேவை இல்லையெனில் சமூகத்தால் வெறுக்கப் பெறும் நோயாவதைத் தவிர வேறு வழியில்லை. இறைவா, நாவடங்கி ஒழுகிட உன் திருநாமத்தைப் படைக்கலமாகத் தந்தருள் செய்க!