பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

107






மார்ச் 31


என் ஆணவத்திற்கு ஒரு குட்டுப்போடு!


இறைவா! ஏன் பாராமுகம்? இறைவா, மெளனம் வேண்டாம்! காலனைக் காலால், காய்ந்தகால், இன்று எங்கு போயிற்று! ஒறுத்தல்மட்டும் போதுமா? என்னைத் திருத்து! பணி கொள்! இறைவா, என்ன சொல்கிறாய்! எத்தனையோ தடவை திருத்தியாயிற்று என்று வருத்தப்படுகிறாயா, இறைவா! நான் என்ன செய்யட்டும்? உனக்கும், எனக்கும் உறவு ஏற்படும் முன்பே-ஆதியிலேயே எனக்கு ஆணவத்துடன் இரண்டறக் கலந்த நிலை! அதன் பின்தான் நீ, என்னுடன் உறவு கொண்டாய்! அதுவும் நீயே வலிய உறவு கொண்டாய். இன்றும் நான் உன்னோடு ஒன்றவில்லை! ஆணவத்தின் பிடியிலிருந்து நான் இன்னும் முற்றாக விடுதலை பெறவில்லையே! அதனால் நீ கூறும் புத்திமதிகள் செரிமானமாவதில்லை! ஆணவம் என்னையும் விஞ்சி முந்திரிக் கொட்டை மாதிரி மூர்க்கத்தனமாக ஆட்டம் போடுகிறது. என்னுடைய ஆணவச்செயல்களைக் கண்டு கோபிப்பாய் என்று உன்னையே கருவறைக் காவலில் வைத்திருக்கிறோம்! அன்று நான்முகன் தலையில் ஒரு குட்டுப் போட்டாயே! அதே போல் இன்று என்னை ஆட்டிப் படைக்கும் ஆணவத்தின் தலையில்குட்டுப் போடு! அதுவே வழி! இறைவா, சீக்கிரம் போடு.