பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

113






ஏப்ரல் 6


ஞாயிற்றைப் போற்றி அதன்வழி இயங்கி மானுடமாகும் மாட்சிமை யருள்க!


இறைவா! கதிரவன். ஆற்றல் மிக்க ஒளிக்கற்றைகளை உடைய கதிரவன்! குகைகளிலும் ஊடுருவும் கதிரொளி. இறைவா! இந்த ஞாயிற்றொளியில்தானே உயிர்க்குலம் தோன்றி வளர்ந்து, தழைத்து வாழ்கிறது! இறைவா, நானும்தான் ஞாயிற்றைத் தொழுகிறேன். தொழுது என்ன பலன்? ஞாயிற்றின் காலக் கடைப்பிடியும்-சுற்றித் திரிதலும் என்னால் இயலவில்லையே!

ஞாயிற்றொளி கண்டால் ஞாலமே சிரித்து மகிழ்கிறது. மலர்கள் விரிந்து மணம் பரப்புகின்றன; புள்ளினங்கள் பாடுகின்றன. இறைவா! நான் கிடந்தாலும் எழுந்தாலும் எனக்கு மகிழ்ச்சியைக் காணோம். என்னைச் சுற்றியிருப்போருக்கும் மகிழ்ச்சியைக் காணோம்!

இறைவா, என்னை ஞாயிற்றின் மாணாக்கனாக்கு! படைப்பாற்றல் உடைய மானுடனாக்கு ஞாயிற்றுக்கு, என்னை வளர்க்குமாறு ஆணையிடு, ஞாயிற்றைப் போற்றி அவ்வழி வளர்ந்து நின் அடிபோற்றப் பணித்திடு, இறைவா!

கு.x.8