பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 13


அதிகாரம் வேண்டாம், நின் அடியவர்க்குத் தொண்டு செய்யும் வாழ்க்கையினை அருள்க!


இறைவா, தனக்குவமையில்லாத தலைவா! நீயே தலைவன். அரசர்கள் கூட முழுத் தலைவர்களல்லர். ஏன்? அரசுகள் அதிகாரத்தையே மையமாகக் கொண்டு தோன்றுகின்றன. அதிகார அடிப்படையில் தலைமை உருவாவதில்லை என்ற பாடத்தினைக் கற்றுத் தா.

இறைவா, மக்களின் முதற் சேவகனாக வாழ்பவனே தலைவன். இறைவா, நீயே இல்லங்கள் தோறும் சேவகனாக எழுந்தருளி அருள் பாலித்திடும் அற்புதத்தை என்னென்பேன்?

இறைவா, மது போதையிலும் கொடிய போதையான அதிகாரம் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம். இறைவா அருள் செய்க! தனி முடி கவித்து ஆளும் அரசேயாயினும் வேண்டாம். உயிர்க்குலத்திற்கு ஆட்பட்டுத் தொழும்பாய்க் கிடந்து தொண்டு செய்யும் இனிய வாய்ப்பினை அருள் செய்க!

நின் அடியார்களுக்கு அடிமையாகத் தொண்டு செய்யும் வாழ்க்கையினை அருள் செய்க! உனக்குப் பணி செய்ய-எந்நாளும் பணி செய்ய வரம் தா. மனக் கவலை நீக்குகின்ற தென்மதுரை அரசே! மனக் கவலையை வளர்க்கும் அதிகாரத்திலிருந்து என்னை விடுதலை செய்.

மனக்கவலையை மாற்றும் தூய தொண்டு நெறி சார்ந்த வாழ்க்கையினை அருள் செய்க! அதிகாரம் எனக்கேது? ஏன் வேண்டவே வேண்டாம். நின் திருவடிக்கு அன்பலாது வேண்டேன்? அருள் செய்க!