பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 16


மானுடத்தை வாழ்விக்கும் முயற்சியில் அயர்விலாது ஈடுபட வாழ்த்து!

இறைவா, எனக்குத் தெளிவு ஏற்படும்படியாகச் சொல்ல வேண்டும். இறைவா, "நான்” அருமையான பொருளா? பொன்னும் மணியும் தானியங்களும் அருமையான பொருள்களா? இறைவா, உண்மையைச் சொல். உனக்கு எது விருப்பம் ?

இறைவா உனக்கு உயிர்கள் மீதுதான் விருப்பம். இறைவா அப்படியா? நான் தப்பிப் பிழைத்தேன். ஆனால் இறைவா, உனது பக்தர்கள் உனக்குப் பொன்னாலும் மணியாலும்தானே ஆராதிக்கிறார்கள்! தங்கத் தேர்தானே செய்கிறார்கள்!

நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ், கோடானு கோடி மக்கள். செல்வ ஆசையால் காதல் வாழ்க்கை கொலைக்களமாகிறது. செவ்வப் போட்டியில் உயிர்கள் பணயங்களாகின்றன. இன்று மானுடத்தின் மதிப்பு உலகச் சந்தையில் இறங்குமுகம். ஒரோவழி மதிப்பு இருப்பதுபோல் இருந்தால் அது விளம்பரம். அந்த விளம்பரமும் இந்த நூற்றாண்டின் மனிதனுக்கல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நாகரிகத்தின் பாதுகாப்பாளனுக்கு.

இறைவா, என்னைக் காப்பாற்று, நான் உன்னைத் தேடி வரவில்லையே என்று எண்ணாதே. மானுடத்தைத் தேடிப்போகிறேன். மானுடத்தை மதிப்புடையதாகச் செய்யும் முயற்சியில் எனக்கு ஆவேசம் கொடு. மானுடத்தை வாழ்விக்கும் முயற்சியில் அயர்விலாது ஈடுபட வாழ்த்து. சோர்ந்து நிற்கும்பொழுது திறனைத் தந்து அருள் செய் இறைவா!