பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 25


மகிழ்ச்சியும் களிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் படைத்திட அருள் செய்க!


இறைவா, நீ மோன அமைதியில் அமர்ந்து முழுநிறை அறிவை, ஆற்றலை இடையீடின்றி உலகிற்கு வழங்கி வளர்த்து வாழ்வித்தருள் செய்கின்றாய். ஆனால் உன் பெயரால் நான் செய்யும் விளையாட்டுக்கள், திருவிழாக்கள், கொட்டு முழக்குகள் கொஞ்சமல்ல. இறைவா, இவையெல்லாம் உனக்காகவா? இல்லை, இல்லை. நான் ஓய்வு பெற, மகிழ்ந்து வாழ இவையெல்லாம் தேவை. ஆதலால், உன் பெயரால் செய்து கொள்கிறேன், இறைவா, பொறுத்துக்கொள்.

என் மனம் பரபரப்பாகவே இருக்கிறது. ஒன்றுவிட்டு ஒன்று பற்றி அலைகிறது; எய்த்துக் களைத்துப் போகிறது. இந்தச் சூழ்நிலையை மாற்றிக் கொள்ளவே நான் திரு விழாவை நாடுகிறேன். இறைவா, மன்னித்துக் கொள்.

என் வாழ்க்கையில் இடையீடில்லாமல் புத்துணர்ச்சியைத் தந்தருள் செய்க! எப்போதும் செயல் வழிப்பட்ட கிளர்ச்சியுடன் இருக்கும் வாழ்க்கையைத் தந்தருள் செய்! இறைவா. களிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையைபுத்துலகைப் படைக்க அருள் செய்க! இறைவா, அருள் செய்க!