பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஏப்ரல் 29


இறைவா, அறிவைப் போற்றி அதனைப் பெறும் திறனை அருளிச் செய்க!


இறைவா, நான் என் வாழ்க்கையில் முன்னேற அறிவு தேவையா? அல்லது நீ தேவையா? உண்மையைச் சொல் இறைவா! என்ன சிரிக்கிறாய்! உன்னையே கேள்விப் பொருள் ஆக்கிவிட்டேனா? ஆம் இறைவா, என்மீது கோபித்துக் கொள்ளாமல் விடை சொல். இறைவா, அறிவு தான் தேவை.

அறிவுதான் முதன்மையானது. அறிவுதான் அனைத்து இன்பத்திற்கும் வாயில். இறைவா, நன்றருளிச் செய்தாய். இறைவா, அப்படியானால் என் வாழ்க்கையில் உன் இடம் என்ன? இறைவா, என்ன சொல்கிறாய்? நீயே அறிவுதானா? நீ அறிவின் திருவுருவமா? இறைவா, மீண்டும் ஒரு தடவை அருள் செய்க! அறிவு தொடக்கம்! முடிவு நீயா?

இறைவா, நான் அறிவைத் தேடாமல் உன்னைத் தேடியலைந்தால் நீ அகப்படமாட்டாய்! அப்படித்தானே இறைவா! இறைவா, நீயே அறிவு என்றாயே, நின்னையறியும் அறிவு எனக்குத் தந்தருள் செய்க! இறைவா, அறிவும் அருளும் முரண்பட்டதல்ல; முடிவில் இரண்டும் ஒன்று என்பதனைத் தெரிந்தேன். இறைவா, இனி அறிவைப் போற்றிப் பெறும் திறனை அருளிச்செய்க.