பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

137




ஏப்ரல் 30


இறைவா, என் மனத்தைத் தூய்மையாக்கி அன்பினால் மெழுகி நினைக்கு அர்ப்பணிக்கிறேன்! இறைவா எழுந்தருள்க!


இறைவா, உண்மையைச் சொல்! உனக்கு விருப்பம் கற் கோயிலா? அல்லது மனக்கோயிலா? இறைவா..! அப்படியா இறைவா? என் மனக்கோயில்தான் உனக்கு வேண்டுமா? ஏன் இறைவா? என் மனம் தூய்மையாக இல்லையே. என் மனத்தில் ஏற்கெனவேயே ஆசை, ஆணவம் இன்ன பிற குணக்கேடுகள் இடையீடின்றி ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. நான் அவற்றை அப்புறப்படுத்திடவும் எளிதில் இயல்வதில்லை.

இறைவா, இந்த இட நெருக்கடியில் உனக்கு எங்கே இடம் கிடைக்கப்போகிறது? இறைவா, என்ன சொல்கிறாய்? ஒண்டுக் குடித்தனமாகப் புகுந்து கொள்வதாகச் சொல்கிறாய். இறைவா, என்ன தவறு செய்கிறேன்? பேரருட் செல்வனாகிய உன்னை ஒண்டுக் குடித்தனமாக வைப்பதா? இறைவா, கூடாது. மன்னித்துக்கொள்.

இன்றே என் மனத்தில் ஆக்கிரமிப்புச் செய்துள்ளவற்றை அகற்றித் தூய்மையாக்கி அன்பினால் மெழுகி நினக்கு அர்ப்பணிக்கிறேன். இறைவா, இது உறுதி என் மனம் இனி உனக்கே இடம். இனி என் மனம் உனக்கே ஆட்செய்யும், என் மனத்தில் எழுந்தருள்க. இறைவா, கருணை பாலித்திடுக!