பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வலப்பக்கத்தில் பூஜ்யமாக நான் நிற்பேன். இதுவே போதும் இறைவா இறைவா, நான் பூஜ்யமாவது எளிதான காரியமா? இல்லையே. ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள், ஆசைகள் விருப்பு வெறுப்புகள் இவ்வளவையும் நான் தொலைத்துப் பூஜ்யமாவது எப்போது? இப்பிறப்பில் நடக்குமா? நடக்காதா? இது என்ன ஜோசியம்! நின் கருணையிருந்தால் நடக்கும்.

திருவருட் சிந்தனை என்ற நூல், தினசரி தியானம் போன்று தினந்தோறும் மூன்று நிமிடங்கள் இறைவனைச் சிந்திப்பதற்கு வழிவகுக்கிறது. ஜனவரி முதல் நாளில் இருந்து டிசம்பர் 31-ஆம் நாள் வரை, அவர் இறைவனோடு உரையாடும் நிலையில் தம் எண்ணங்களைத் தருகிறார். மனித வாழ்க்கைக்கு மிகுதியாகப் பயன்படும் நூல். இறைவனோடு பேசுகிறார். அப்பேச்சை அவ்வாறே வெளிப்படுத்துகிறார். பல இடங்களில் அவருடைய தெளிவான எண்ணங்கள் வெளிப்படுகின்றன.

தமிழில் பக்தி இலக்கியங்கள் மிகுதி. அதை நன்றாகக் கற்றவர் அடிகளார். அவருக்குத் தமிழ் இலக்கியம் முழுவதும் தெரியும் என்பதை இந்நூல் காட்டுகிறது. பெரும்பாலும் பழுத்த அனுபவம் பெற்ற பின்பே இதை எழுதியுள்ளார். என்பது வெளிப்படுகிறது. திருக்குறள், தேவாரங்கள், திருவாசகம், திருமந்திரம், திருத் தொண்டர் புராணம், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், பாரதி இவர்களின் பாடல்களின் பிழிவாகத் திருவருட் சிந்தனை உள்ளது.

சிறந்த மனிதனாகவேண்டும் என்று அடிப்படையில் நினைக்கிறார். சமுதாயத்தில் மக்களே போல்வர் கயவர் என்ற நிலை உள்ளதைப் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். உலக சமுதாயம் அன்புடனும் அமைதியுடனும் மிகுந்த உழைப்புடனும் வாழவேண்டும் என்பதை விரும்புகிறார். முதல் நாள் திருவருட் சிந்தனையில் உழைப்பு! உழைப்பு! உழைப்பு! இதுவே இந்த ஆண்டின் குறிக்கோளாகக் கூட்டித் தருக இறைவா! என்று கேட்கிறார்.

கணக்கில் கூட்டல் உள்ளதுபோல் நல்லவைகளைக் கூட்டிக்கொள்ளவேண்டும். மனிதர்களைக் கூட்டி தனிமனிதனாக வாழாமல் கூட்டத்தோடு வாழவேண்டும் என்பதை நினைக்கிறார். தீயவைகளைக் கழித்தல் வேண்டும் என்பதையும் சிந்திக்கிறார். பன்மடங்காக ஆற்றல் பெருகி பெருக்கமுற வாழ்தல் வேண்டும்.