பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146 தவத்திரு குன்றக்குடி அடிகளார்




மே 9


வலிமையினை நான் பெற்று வாழ்ந்திட அருள்க!


இறைவா, வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பே! நின் நெறியில் நிற்கும்பேறு பெற்றிலேனே! நான் வலியார் பக்கம் சார்கிறேன். மெலியார் என்றால் அங்கீகரிப்பது கூட இல்லை. ஏன் இந்த நிலை இறைவா? நான் வலியாரோடிருந்தாலே வாழ முடியும்.

என்னுடைய அருங்குணங்கள் - தொண்டுகள் என்னை வாழச்செய்து விடாது. நிலையில்லா உலகத்தில் நிலைபெறச் செய்து விடாது. தகுதியுடையது வாழும் இது இந்த உலகத்தின் நியதி.

இறைவா, நான் இந்த உலகத்தில் நிலையாக வாழும் தகுதியைப் பெற அருள் செய்க! நெஞ்சிலே உறுதி, அறிவிலே தெளிவு, உழைப்பின் மேல் நிற்கும் உடல், சலியாத உழைப்பு, வலிமை இவையெல்லாம் எனக்குத் தேவை. பொருளால் வலிமை பெற வேண்டும்.

இன்றைய சமூக வாழ்க்கையின் தேவை பணமே! நிறைந்த பொருளைச் செய்து குவித்துக் கொள்ள வேண்டும். நண்பர்களை, அலுவலர்களை, பின் பற்றாளர்களை இனம் கண்டு கொண்டு அவர்கள் தம் உறவைப் பராமரித்து எனக்கு வலிமையாக்கிக் கொள்ள அருள் செய்க! அறிவில் வலிமை, நெஞ்சில் வலிமை, பொருள் வலிமை, படை வலிமை இவைகளை நான் பெற அருள் செய்க! வாய்மையே என் வாழ்வின் அச்சு. உயிர்ப்பு! இறைவா, வலிவலத்துறை நாயகனே, அருள் செய்க!