பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

என்றும் கூறுகிறார். வகை, தொகையாக என்று கூறுவதுபோன்று தொகுத்தும் வகுத்தும் வாழவேண்டும் என்று கருதுகிறார்.

வாழைமரம்போல் வாழவேண்டும் என்று நினைக்கிறார். வாழைமரத்தின் எல்லா உறுப்புக்களும் பயன்படுகின்றன. இலை, காய், கனி, தண்டு, தடை அனைத்தும் பயன்படுகின்றன. அதோடு வாழையடி வாழையாக என்று கூறும்போது ஒரு வாழைமரத்தின் கீழ் பத்துக் கன்றுகள் தோன்றும். வளர்ச்சியில் அவை அதிகம். அதனால் வாழைபோல் வாழ அருள்க, என்கிறார். (ஜனவரி 14)

'முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியனே' என்ற திருவாசகப் பகுதியை அப்படியே எடுத்தாள்கிறார். 365 நாட்களுக்கும், 365 தலைப்புக்கள் தந்துள்ளார். அத்தலைப்புக்களைப் படித்தாலே அவருடைய எண்ணங்கள் தெரியும். அதிர்ஷ்டம் என்பது ஒரு குருட்டுப்போக்கு என்பது அவர் கருத்து (ஜனவரி 22).

அவருடைய சொல்லாட்சி அழுத்தமாக அமைந்துள்ளது. உயிரின் தரத்தை உயர்த்தி அருள்க என்பார். மெய்ப்பொருள் நாயனார், கண்ணப்பர் போன்ற நாயன்மார்கள் பலரின் வாழ்க்கைச் செய்திகளை எடுத்துத் தம் எண்ணத்திற்குத் தக அமைக்கிறார். 'இறைவா! நான் விரும்புவனவற்றை அருள்செய்க என்பது என் பிரார்த்தனையல்ல. நான் பெறுவதற்குத் தகுதியுடையவற்றைப் பெற அருள் செய்க!' என்று கேட்கிறார். (பிப்ரவரி 7)

"ஆசை தற்சார்புடையது. அன்பு பிறர் நலச் சார்புடையது. தியாகத்தன்மையுடையது." (பிப்ரவரி 10) போன்ற தொடர்கள் ஆழமாக சிந்திக்கத் தகுந்த தொடர்கள்.

மனிதர்களோடு வாழ்வது-இது கடினமாக உள்ளதை ஒரு நாள் சிந்தனையில் தருகிறார். 'இறைவா! எத்தனையோ இயற்கை வனப்புமிக்க சூழ்நிலைகளை அமைத்துத் தந்தாய். நான் மகிழ்வோடு வாழ. ஆனால், மோசமான சில மனிதர்களையும் கூடவே படைத்தாயே, ஏன்? இந்த மனிதக் கூட்டத்தில் வாழ்வது எளிதாக இல்லையே. ஆம்! வழுக்கலில்தானே காலூன்றும் பயிற்சி கிடைக்கும். பொய்ம்மையில் தானே மெய்ம்மையின் தெளிவு தெரியும். வெயில் தானே நிழலின் அருமையைக் காட்டுகிறது.