பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

155






மே 18


பயன்படுவோனாக வாழ ஆசைப்படுகிறேன்! இறைவா அருள்க!

இறைவா, இது உன்னுடைய உலகமா? நீ அருள் பாலித்து வாழவைக்கும் உலகமா? உண்மையைச்சொல். இதுவல்ல உன் உலகம். இறைவா, எங்குப் பார்த்தாலும் சண்டைகள், கலகங்கள், கொலைகள், களவுகள், காவல் நிலையங்கள். அம்மம்ம, பயங்கரமாக இருக்கிறது! ஏன் இந்த நிலை?

இறைவா, ஏன் மெளனம் சாதிக்கிறாய்? இறைவா, அப்படியா? நான்- மனிதன். நின் வழி வராமல் சைத்தான் கையில் சிக்கிவிட்டேனா? அப்படியா. இறைவா! சைத்தான் பாவியாயிற்றே. நன்மை செய்வது போலக்காட்டி அழித்து விடுவானே!

இறைவா, என்னைச் சைத்தானிடமிருந்து காப்பாற்று. ஆணவத்தாலாகிய மிடுக்கு எனக்கு வேண்டவே வேண்டாம். அடக்கமாக இருத்தல், எளிமையாக வாழ்தல், ஆருயிர்களுக்கு எல்லாம் அன்பு காட்டுதல் ஆகிய பண்புகளை அருட் கொடையாக வழங்கி அருள் செய்க!

நான் வாழ ஆசைப்படவில்லை! நல்லவனாக மட்டும் வாழ ஆசைப்படவில்லை. பயன்படுவோனாக வாழ ஆசைப்படுகிறேன். இறைவா, அருள் செய்க!