பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இறைவா, இந்த மனிதர்களோடு சேர்ந்து அழிந்து போகாமல் காப்பாற்று. நான் உன் ஆணையை மீறவில்லை. அவர்களுடன் வாழ்கிறேன்; அவர்களுக்காகவும் வாழ்கிறேன். நான் எந்த மனிதரையும் அலட்சியப்படுத்த மாட்டேன். என்னுடைய பகைவனையும் நான் மதிப்பேன். அன்பு காட்டுவேன். மனிதகுலம் முழுவதும் என் சுற்றம் எனக்கொண்டு ஒழுகுவேன். இறைவா, இங்ஙனம் வாழும் திறனை அருள் செய்க! (பிப்ரவரி 23).

கல்லைப் பிசைந்து கனியாக்கு என்ற தொடர் பல பகுதிகளில் வருகிறது.என்னை மனிதனாக்கு இறைவா! (மார்ச் 22). எனது உடம்பை இளைக்க செய்து வருகிறேன்.அது இளைத்துவிடும். நீ உள்ளொளி பெருக்கிவிடு,என்னைக் காப்பாற்று. என்னை முதலில் நல்ல விலங்காக்கு, பின் மனிதனாக்குக. பின் நின் திருவருளிலேயே அருள் புரிக! என்று கேட்கிறார்.

இந்த உடல் எனக்குக் கருவியாக இல்லை. நான் தான் உடலுக்குக் கருவியாகிவிட்டேன் என்று வருந்துகிறார். ஐம்புலன்களின் போராட்டம் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

“இன்று முதல் நான் நல்லனவே எண்ணுவேன். நல்லனவே செய்வேன். இது உறுதி!" (மார்ச் 24) என்று பல இடங்களில் எழுதுகிறார்.

அவர் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்கள் தொண்டு, உழைப்பு, அன்பு, அருள், மகிழ்ச்சியும் களிப்பும் போன்றன.

அம்மம்ம என்ற வியப்புத் தொடர் பல இடங்களில் பயன்கொள்ளப்பட்டுள்ளது. பட்டிமன்றம் என்றாலே தமிழகத்தில் அடிகளார் தலைமை வகிப்பார் என்பது தமிழகம் அறிந்த செய்தி. பேசிப்பேசிப் பேச்சையே வெறுத்த நிலையும் அவர் எண்ணத்தில் காண்கிறோம்.

இறைவா, இனிப் பேசுவது வேண்டாம். பேச்சுக் கச்சேரி போதும். அரட்டை அடித்தல் வேண்டாம். பெரிய பெரிய பேச்சாளர்கள் கூட பெரிய காரியங்களைச் செய்ததாக வரலாறு இல்லை. வாய்ப்பந்தல் வாழ்வளிக்காது அல்லவா?. இறைவா, இனி நான் பேசாதிருக்கும்படி அருள்செய். நாளும் மெளன நிலையிலேயே காரியங்களை இயற்றிடும் இனிய பழக்கத்தினை அருள் செய்க, பேசா வரம் அருள்க, மெளனத்தில் பழகும்.பெருவாழ்வினை அருள்செய்.