பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வருகிறது. என் மனம் எளிதில் பற்றிக் கொணர்ந்த செய்திகள் எதுவாலும் எனக்கு யாதொரு பயனும் இல்லை. இறைவா என் மனம் உலைப்பானையில் நின்று திளைத்தாடும் ஆமைபோல் களிக்கிறது. மனம் போகும் போக்கில் நான் செல்லாமல் இருக்க அருள் செய்க. என் மனத்தின் மீது மேலாணை தந்து அருள் செய்க, மனத்துக்கண் மாசிலானாக வாழ்ந்திட அருள் செய்க. (ஆகஸ்டு 17).

இறைவனிடம் நேரடியாகப் பேசுவதுபோன்று நான் பேசுவதற்கு நீ என்னசொல்கிறாய் என்று கேட்பார். அதோடு இறைவனிடம் என்ன சிரிக்கிறாய் என்று வினவுவார். (அக்டோபர் 1)

வாழ்க்கையில் தோல்விகளும் வெற்றிகளே என்பது அவருடைய எண்ணம். “ஒரு வெற்றியை விட தோல்வி போற்றத்தக்கது. பெருமைப் படத்தக்கது. வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடியது. உலகியல் நெறிப்படி ஏசுபெருமான் தோற்றார். ஆனால், வாழ்வியல் நெறிப்படி வென்றார். இன்றும் மனித உலகத்தைவென்று வாழ்கின்றார். என் வாழ்க்கையில் உயர் குறிக்கோளை எடுத்துக் கொள்வேன். என் வாழ்க்கையைப் போர்க்களமாக்கிக் கொள்வேன். ஓயாது போராடுவேன்.”

இந்த நடைப்பயணத்தில் நான் சந்திக்கும் துன்பங்களைக் கண்டு துவண்டு விழுந்துவிடமாட்டேன். சோர்ந்து விடமாட்டேன். என் பயணத்தை இடையில் நிறுத்தவும் மாட்டேன். நான் தோல்விகளைச் சந்தித்தாலும், அழுது கலங்கமாட்டேன். அத்தோல்விகளை, வெற்றிப் பயணத்தின் படிக் கற்களாக்கித் தொடர்ந்து நடப்பேன். இறைவா, இது உறுதி. எனக்குத் தோல்விகளும் வெற்றிகளே என்றுணர்த்திய உன் கருணைக்கு நன்றி. போற்றி! போற்றி!

இன்று உலகம் எங்கும் தீவிரவாதிகளின் செயல்களால் உலக மக்கள் துன்புறுகின்றனர். தீவிரவாதத்தை எவ்வாறு அடக்குவது என்பதைப் பற்றி உலகமே சிந்திக்கும் நிலை ஏற்படுகிறது. உலகில் அமைதியும் இன்பமும் அன்பும் எங்கு கிடைக்கும்? என்று ஏங்குகின்றனர், உலக மக்கள். இன்றைய நிலைக்கும் தகுந்த நிலையில் அவருடைய சிந்தனை அமைகிறது.

“இறைவா, உனது மறு பெயர்கள் அமைதி, இன்பம் என்பன. ஆனால் இறைவா! உன்னை நான் அமைதியாகக் கண்டு