பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

ஆராதித்தேனில்லை. இன்பமாக நினைந்து ஏத்திப் புகழ்ந்தேனில்லை. ஆம் இறைவா அமைதியின் தரிசனம் கிடைப்பதே இல்லை. எங்கு நோக்கினும் பதற்றநிலை. பழைய காட்டுமிராண்டிகளைப் போலவே அடுதலும் தொலைதலும் நிகழ்கின்றன. இந்த நிலை வீட்டிலிருந்து நாடு வரை உள்ளது.

இறைவா, இந்தக் கலக உலகை மீட்டு அமைதிக்குக் கொண்டு வர வேண்டுமா? ஆம் இறைவா! நிச்சயம் கொண்டுவர வேண்டும். ஆழ்ந்த அறிவிலேயே அமைதி தோன்றும். தெளிவான சிந்தனையிலேயே அமைதி தோன்றும். தன்னல மறுப்பிலேயே அமைதி தலைகாட்டும். பிறர்க்கென முயலும் பண்பிலேயே அமைதி வந்தமையும். இதுவே நியதி.

அன்பே இன்பம். இன்பமே அன்பு! அமைதியே வழிபாடு இறைவா, அமைதியை அருள் செய்க! உலகில் அமைதி நிலவ அருள் செய்க! (அக்டோபர் 3).

தமிழ்நாட்டில் கோயில் வழிபாடு தமிழில் நடைபெற வேண்டும் என்று பல போராட்டங்கள் நடந்தன. நடந்துகொண்டு இருக்கின்றன. இதுபற்றியும் அடிகளார் சிந்திக்கிறார். தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

“இறைவா, புலித்தோல் உடுத்திய முதல்வா! உண்மையைச் சொல்! சமஸ்கிருதம், தமிழ் - இவ்விரண்டு மொழிகளில் எந்த மொழியைக் கேட்பதில் உனக்கு விருப்பம் அதிகம்? இறைவா, நாடறிந்த ஓர் உண்மைக்குக் கேள்வியா என்று கேட்கிறாய்! ஆம், இறைவா இன்று சிலர் சமஸ்கிருதம் தான் உனக்குரிய மொழி, தமிழ் அல்ல என்று கூறுகின்றார்கள். வழக்காடுகிறார்கள். நீ உன் விருப்பத்தைச் சொல்லி வழக்கைத் தீர்த்து வைக்கக் கூடாதா?

நீ அன்று படிக்காசு கொடுத்துப் பைந்தமிழைக் கேட்டாய். பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெறுவதற்கு வைகை ஆற்றங்கரையில் மண் சுமந்தாய். சுந்தரரின் செந்தமிழுக்காகத் திருவாரூர்த் தெருவில் நடந்தாய்.

தமிழ் மந்திரத்தை எழுதி நெருப்பிலிட்ட ஏடு எரியவில்லை. வெள்ளத்தை எதிர்கொண்டு கரை ஏறியது. ஆம் இறைவா! தமிழ், நீ விரும்பும் மொழி, இல்லை, இல்லை, தமிழே நீ, நீயே தமிழ். என்ன இறைவா கூறுகிறாய்?

கு. X. 1A