பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

திருக்கோயில்களில் தமிழை அகற்றி, சமஸ்கிருதத்தை நுழைத்ததால்தான் தமிழிருக்கும் இடம் தேடிப்போய் விட்டாயா? அதனால் தான் உன்னைத் திருக்கோயிலில் தேடிப்பார்த்துவிட்டு, “கடவுள் இல்லை” என்று கூறுகிறார்களா?

இறைவா, எங்கள் தவறை மன்னித்து அருள். நாங்கள் நல்ல தமிழில் வழிபாடு செய்கிறோம். இறைவா, திருக்கோயிலுக்கு வா! எழுந்தருளி வாழ்த்துக. (நவம்பர் 27)

“சாதி ஆசாரங்கள் சிறு பிள்ளை விளையாட்டு என்பது அவர் கருத்து." (டிசம்பர் 6)

பக்தி இலக்கியக் கருத்துக்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. தத்துவ எண்ணங்கள் பல உள்ளன. நான் எனது என்ற ஆணவத்தை அழித்தல் வேண்டும் என்ற உணர்வு பல பகுதிகளில் வெளிப்படுகிறது. இந்நூல் மிகுந்த மனப்பக்குவத்தோடு எழுதப்பெற்றுள்ளது. அடிகளாரின் இறுதி ஐந்து ஆண்டுகளில் இந்நூல் எழுதப்பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. அடிகளாரை இந்நூல் முழுநிலையில் பிரதிபலிக்கிறது. இன்று என் பிறந்தநாள். (ஜூலை 11) என்று எழுதுகிறார். இன்று மிகுதியாகத் துன்புற்றேன் என்றும் எழுதுகிறார். இவ்வாறு கால உணர்வைப் பற்றிய குறிப்புக்கள் பல இடங்களில் உள்ளன. காலத்தை முக்கியமாகக் கருதவேண்டும் என்று அவர் கருதுகிறார். தினந்தோறும் மூன்று நிமிடங்கள் திருவருட் சிந்தனையைப் படித்தால் வாழ்க்கையை வெற்றிகரமாகச் செலுத்தமுடியும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

அடிகளார் என்றும் வாழ்கிறார். தமிழ் இருக்கும் வரை வாழ்வார். உலகம் இருக்கும் வரை தமிழ் இருக்கும். அதனால் உலகம் இருக்கும் வரை அடிகளார் வாழ்வார் என்பது இந்நூல் வழியாக நாம் முழுநிலையில் உணர்கிறோம்.

இருக்கும் காலத்து தொண்டு செய்ததுபோன்று காலம் கடந்த பின்பும் அவர் நூல்கள் வழியாக அடிகளார் தமிழக மக்களுக்கு வழிகாட்டியாகத் தொண்டு செய்கிறார் என்பதை நூல் நிறுவுகிறது.

வாழ்க அடிகளாரின் புகழ்!