பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


விவாதங்களைத் தவிர்த்திடக் கருணை பாலித்திடுக! யாரொடும் பகை கொள்ளாமல் வாழும் வண்ணம் அருள்! எல்லோருக்கும் அன்பு செய்யும் விரிந்த இதயத்தைத் தா! உழைப்பு! உழைப்பு! உழைப்பு! இந்த ஆண்டின் குறிக்கோளைக் கூட்டித் தருக!” என்று மகாசந்நிதானம் இறைவன் சந்நிதானத்தில் மன்றாடுகின்றார்கள். இப்படி யார் இன்று, இறைவன் சந்நிதானத்தில் உலக நன்மைக்கும் தன் மேன்மைக்கும் பிரார்த்திக்கின்றார்? பிரார்த்தனை என்பது மனிதர்கள் செய்யும் அநியாயத்தில் இறைவனையும் இணைத்துக் கொள்வதால் தானே உண்டியல் பெட்டகத்தில் பணக் கத்தைகள்! பாவத்தை நீக்கும் பரம்பொருளிடம் செய்த பாவத்திற்குக் காணிக்கை தந்து இறைவனையும் தாங்கள் செய்த பாவத்தில் கூட்டுச் சேர்த்துக் கொள்கின்றனர்.

கோடியை, இலட்சத்தை, மாடியை, தோட்டத்தை, மாளிகையை இறைவனிடம் கோரவில்லை, எல்லோருக்கும் அன்பு செய்யும் விரிந்த இதயத்தைக் கேட்கின்றார்கள். “உழைக்காமல் கைகளைக் கட்டி அமர்ந்து கொள்வேன்! உன் பெயரைச் சொன்னால் மட்டும் செல்வம் சேர்ந்து விடவேண்டும்.” என்று இறைவனிடம் கோரவில்லை. உழைப்பு! உழைப்பு! உழைப்பு! இறைவனிடம் உழைக்க மனமும், உடலும் நலமாய் இருக்கப் பிரார்த்திக்கும் பிரார்த்தனை, உலகத்தின் உன்னதமான பிரார்த்தனை!

“ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்!”

என்று பாரதி உண்மையான வேள்வியைச் சுட்டுகின்றான், இன்று அந்த வழிபாட்டு நிலை வளர்ந்தால் ஆடம்பர வேள்விகளும் ஆரவாரச் சடங்குகளும் தேவைதானா? என்ற நிலை ஏற்படும்.