பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

திருக்கோயில்கள், மண் எல்லாம் விண்முட்டும் கோபுரங்களாக உருமாறிய திருக்கோயில்கள், வண்ணங்கள் எல்லாம் உயிர்ப்புடைய ஓவியங்களாக உருமாறிய திருக்கோயில்கள் இறைவன் தங்கியிருக்கும் இருப்பிடம் மட்டுமல்ல; மனித சமூகம் கூடிக் கலந்து வாழ்கின்ற அறப்பண்ணைகள்; அருள் நிலையங்கள்! என்ற அற்புதக் கருத்தினை வலியுறுத்தும் 'ஆலயங்கள் சமுதாய மையங்கள்’ நமக்குக் கிடைத்த அற்புதப் பெட்டகமாகும்.

திருவாசகப் பெரும் பேரின்பத்தைத் துய்த்துத் துய்த்துத் தேக்கித் தேக்கித் திகழும் அருள் நிறை நெஞ்சம் போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் என்ற அருளனுபவத் திருநிகழ் நெஞ்சம் உலக மக்களுக்கு வழங்கும் வாழ்வியல் வழிகாட்டியே இந்நூல், சமய சமூகச் சிந்தனை ஒருங்கிணைந்த புதிய சமயப் பாதைக்கு இந்நூல் அழைத்துச் செல்லும்.

இந்நூலைச் சிறப்பாக அச்சிட்டு வெளிக் கொணரும் மணிவாசகர் பதிப்பக ச. மெய்யப்பன் அவர்களுக்கும் இந்நூலுக்கு ஆக்கம் தரும் அணிந்துரை வழங்கியுள்ள முனைவர் ச.வே. சுப்பிரமணியன் அவர்களுக்கும் நூல் தொகுக்கும் பணியில் இரவு பகல் பாராது பணியாற்றிய ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு, இராமசாமி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் தமிழாகரர் தெ. முருகசாமி ஆகியோருக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்; நல்வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள் உரியனவாகுக.