பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 24


உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து வளர அருள் செய்க!


இறைவா, நரியைப் பரியாக்கிய நாயகனே! என்ன அற்புதம், ஒன்றுக்கும் உதவாத-அழகில்லாத-உபத்திரவம் செய்யக்கூடிய நரிகளைக் குதிரைகளாக்கி நாட்டில் நடமாடச் செய்த வித்தகனே! நீ ஏன் இதைச் செய்தருளினை? மானிட சாதிக்கு ஒரு படிப்பினை தரச் செய்தருளினை!

ஆம். இறைவா! நான் "எனக்கு நல்ல வேலையாகக் கிடைக்க வேண்டும். கைநிறைய ஊதியம் கிடைக்கவேண்டும். சிக்கல் இல்லாத சுலபமான வேலையாக அமைய வேண்டும். சுற்றுப்புறச் சூழ்நிலையெல்லாம் நன்றாக அமையவேண்டும்” - என்றெல்லாம் எண்ணிக் காத்துக் கொண்டிருக்கிறேன். உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து வளர மனம் இல்லை.

இறைவா, நான் எனக்கு வாய்த்ததை வழிமுறையுடன் சிறப்பாகச் செய்கின்றேனா? இதுதான் வினா. எனக்கு வாய்த்த வேலை மோசமான வேலையாக இருக்கலாம். எனக்கு வாய்த்த சூழ்நிலைகள் மோசமாக இருக்கலாம். நான் முயன்றால் எதையும் நல்லதாகச் செய்ய இயலாதா? நின் திருவருள் எனக்குத் துணை செய்யாதா?

இறைவா, அழகை அழகுபடுத்துவதில் என்ன இருக்கிறது? நல்லதை மேலும் நல்லதாக்குவதில் என்ன முயற்சி வேண்டியிருக்கிறது?

இனி நான் நல்ல வேலைக்காக காத்திருக்கமாட்டேன்! எந்தப்பணி கிடைத்ததோ அந்தப் பணியை அது எவ்வளவு மோசமான பணியாக இருந்தாலும் முழு ஊக்கத்துடன் செய்து சிறப்படைவேன்!

இறைவா, கெட்டதை நல்லதாக்குவதே ஆள்வினை. பயனில்லாததைப் பயன்பாடுடையதாக்குவதே முயற்சி. இனி என் வாழக்கை இங்ஙனம் அமைய அருள் செய்க!