பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஜனவரி 2


எல்லாரிடமும் அன்பு செய்யும் இதயம் தந்தருள்க!

இறைவா, நீ இயக்கும் உலகத்தில் தனித்தன்மை உடையது எதையும் நான் காண்கிலேன்! ஐம்பூதங்களின் கூட்டியக்கமே உலகியக்கம். உலகில் நான் காணும்-நுகரும் பொருள்கள் அனைத்துமே ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு பொருள்களின் கூட்டமைப்பேயாம். ஏன், இறைவா? என் உடம்புகூட நூற்றுக்கணக்கான பொருள்களின் கூட்டமைப்புத்தானே. இது மட்டுமா இறைவா? இந்த உடம்பில் உள்ள வேறுபட்ட அமைப்புகள் ஒன்றோடொன்று ஒத்திசைந்து இயங்கும்போதுதானே நான் வாழ்கின்றேன். ஒன்றோடொன்று ஒத்திசையாத பொழுது அல்லது வேறுபாட்டை இயக்கத்தில் காட்டும் பொழுது நோயாளியாகின்றேன், அல்லது பைத்தியக்காரனாகின்றேன். இறைவா, இது மட்டுமா?. உடம்பில் கிடக்கும் பல்வேறு தாதுப்பொருள்கள் தம்முள் மிகாமலும், குறையாமலும் இருக்கும்பொழுது வாழ்கின்றேன்.

எங்கும் கூட்டமைப்புக்களையே பார்க்கும் நான் மட்டும் ஏன் தனித்தன்மை கோருகின்றேன். எனது தனித் தன்மைக்காகப் போராடுகிறேன். மற்றவர்களை அழிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் புத்தியை நீ திருத்தக் கூடாதா? எங்கும் எதிலும் பொதுத்தன்மை காணும் அறிவைத் தரக் கூடாதா? பொதுமையில்தானே தனித்தன்மை விளங்கும்.

இறைவா, கூடிவாழத் தடையாக இருக்கும் எதுவும் எனக்கு வேண்டாம்; வேண்டவே வேண்டாம்! இறைவா அருள் செய்! எல்லோரிடமும் அன்பு செய்யும் இதயத்தைக் கொடு. மற்றவர்க்குத் தருவதிலே மகிழ்ச்சியடையும் மனத்தைத்தா. மற்றவர் சொல்லும் செய்திகளைக் கேட்கும் பக்குவத்தை அருள் செய்! யாரோடும் பகை கொள்ளாத அருள் உள்ளம் பாலித்திடு! அருள் செய்க!