பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நவம்பர் 3


இறைவா, சமுதாயம் தேர் போல் நிகழ்ந்திடத் திருவருள்
செய்க!


இறைவா, தேரூர்ந்த செல்வா! ஏன் தேரூர்ந்து வருகிறாய்! எனக்குக் காட்சி மூலம் படிப்பினைகளைச் சொல்லித்தர நீ தேரூர்ந்து வருகிறாய்! ஆம் இறைவா, இந்தச் சமூகத்தில் நல்வாழ்வு, ஒரு பெரிய தேரைப் போன்றது.


தேர் எளிதில் செய்யப் பெறுவதா? பல தச்சர்கள் கூடிப் பலநாள் உழைப்பால் உருவாக்கப் பெற்றது தேர்! அதுபோலச் சமுதாய நல்வாழ்க்கையைப் பலரும் கூடிப் பலநாள் முயன்றுதானே நடத்திடுதல் இயலும்.


சமுதாயத்தில் நல் வாழ்வு வாழ இயலவில்லையே! சமுதாய இணக்கமே உருவாக வில்லையே. இல்லை. இல்லை. இறைவா! இன்னமும் சமுதாய அமைப்பே உருவாக வில்லையே! ஏன்?


சமுதாயத்தில் உறுப்பாகிய குடும்பமே, வடிவத்தில் தான், குடும்பமாயிருக்கிறது. உணர்வில், ஒருமையில் சிறந்த குடும்பமே இன்னமும் தோன்றவில்லை; இறைவா, இரங்கத்தக்க நிலை. இறைவா, காப்பாற்று.


நான் ஒரு சமுதாயப் பிராணியாகவே வாழ ஆசைப்படுகிறேன்! எனக்கு, சமுதாயத் தினின்று பிரித்துக் காட்டும் தனித்தன்மை மிக்க சிறப்புக்கள், விளம்பரங்கள் எதுவும் வேண்டாம்.


சமுதாய அமைப்பின் பகையாகிய தனிநபர் வழிபாட்டை, வெறுக்கும் மனப்பாங்கை அருள் செய்க! சமுதாயம் தழுவிய அன்பை அருள் செய்க! வேற்றுமைகளைக் கடந்து சமுதாய அமைப்பில்-ஒருமை நிலையில் வாழ அருள் செய்க!


சமுதாயத்தின் சராசரி நிலைக்கு மேலாக எனக்கு எதுவும் வேண்டாமையை விழுமிய செல்வமாக அருள் செய்க! சமுதாயம் தேர் போலானால் நீ எழுந்தருள் செய்வாய்! விரைந்து சமுதாயத்தேர் காண அருள் செய்க!