பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நவம்பர் 7


இறைவா, துய்ப்பில் பூரணத்துவம் அடையும் அமர வாழ்வை
அருள்க!


இறைவா, பெண்ணின் நல்லாளொடும் வாழும் பெருந்தகையே! திருஞானசம்பந்தர் "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்றருளிச் செய்துள்ளார். "மண்ணில் நல்ல வண்ணம் துய்த்தும் களித்தும் மகிழ்ந்தும் வாழ்ந்தால், இன்ப அன்பாகிய கதி வாராமல் போகாது” என்றருளிச் செய்துள்ளார்.


இறைவா, நாள்தோறும் சில மூடர்கள் வாழ்க்கையை ‘மாயை' என்கின்றனர். சம்சார சாகரம் என்கின்றனர். நிலையிலாதது என்கின்றனர்! இறைவா, என் மனம் மயங்குகிறது.


மூத்தபிள்ளையாரின் அருமறை வாக்கினை நடைமுறைப்படுத்துக என்று ஆணை பிறப்பிக்கிறாய்? இறைவா, நான் மண்ணில் வாழ்வதற்காகவே பிறந்தேன். என்னைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் துய்ப்பதற்குரிய பொருள்கள்.


பொருள்களைத் துய்ப்பதிலேயே வாழ்க்கை வளர்கிறது. ஆதலால், இறைவா, கொடிய விரதங்கள் எனக்கு வேண்டாம். ஆனால் மனம் விகாரப்படாமல் துய்த்துப் பழகுதல் வேண்டும். இஃது ஒரு கலை.


துய்ப்பது துய்ப்பதற்காகவே நிகழ்தல் வேண்டும். துய்ப்பது தேவை. துய்ப்பது ஆசையாக வளர்ந்து விடக்கூடாது. இறைவா, துய்ப்பன துய்க்க அருள்செய்க! மண்ணில் நல்லவண்ணம் வாழ அருள் செய்க!


இம் மண்ணையும் விண்ணகமாக்கும் அருள் நலஞ் சார்ந்த உழைப்பினைத் தந்தருள் செய்க! துய்க்கும் பொருள்களின் நலம் கெடாமல் பாதுகாத்துத் துய்க்கும் பாங்கினைக் கற்றுத் தா! இறைவா, துய்ப்பில் பூரணத்துவம் அடையும் அமர வாழ்வை வழங்கி அருள் செய்க!