பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நவம்பர் 9


அறநெறிநிற்கும் வாழ்வே, அருள் நலம் சேர்க்கும் வாழ்வு!
இறைவா அருள்க!


இறைவா, மனிதரை ஆட்கொள்ளும் தெய்வமே! மனித நேயம் மிக்க தலைவனே! எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகிய மனித நேயத்தின் ஒரு திவலையை எனக்கும் அருள் செய்க! மனித நேயம்! ஆம்! மனித நேயமே தத்துவங்களின் முடிவு! இலக்கியங்களின் பயன். சொர்க்கத்தின் வாயில்.


மனித நேயம் அன்பை வளர்க்கும். போரிடும் கெட்ட உலகத்தைச் சாய்க்கும். மனித நேயம் வேற்றுமைகளைக் கடந்தது. மனித நேயம் எல்லைகளைக் கடந்தது.


மனித நேயம் பயன் கருதாதது! பண்புகளில் சிறந்தது. மனித நேயம் ஆணவத்தின் பகை அன்பிற்கு ஊற்று. மனித நேயம் அன்பின் ஆக்கம்; உறவுகளின் அரண், ஒப்புரவு சார்ந்த ஒழுக்கம். மனித நேயமிக்க வாழ்வினை அருளிச் செய்க!


யார் மாட்டும் அன்பு காட்டும் விரிந்த இதயத்தைத் தா! பகைமை எனும் பெரு நெருப்பு அண்டமுடியாத அருள் வாழ்வினை அருள் செய்க: மனித நேயத்தை வளர்க்கும் முகனமர்ந்த இன்சொல்லினைத் தா!


பிறர் இன்புறுதல் கண்டு மகிழும் பேருள்ளத்தினை அருள் செய்க! இறைவா, அர்ப்பணிப்பு உணர்வுடன் வையகம் வாழத் தொண்டு செய்யும் பெருவாழ்வினைத் தந்தருள் செய்க!


மனித நேயம் உயர்ந்தது. உயர்வற உயர்ந்தது! அறநெறி நிற்கும் வாழ்வே, அருள் நலம் சேர்க்கும் வாழ்வு. இறைவா, அருள் செய்க!