பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 19


உயிரினும் ஒழுக்கம் சிறந்ததெனக் கருதிப் பயின்றிடும் பாங்கினை அருள்பாலித்திடுக!

இறைவா, ஒழுங்கியல் அமைந்த உலகைக் கண்ட தலைவா! எனக்கு ஒழுங்கினைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தந்தருள் செய்க. ஒழுங்கில் உறுதியை அருள் பாலித்திடுக!

என்னுடைய முப்பத்திரண்டு பற்களும் ஒழுங்காக, வரிசையாக அடுக்கப் பெற்றிருப்பதால்தான் அழகாக இருக்கின்றன. உணவை அரைக்கப் பயன்படுகின்றன, ஒலிக் காற்றை முறைப்படுத்திச் சொற்களாக்கித் தருகின்றன! இதை நான் அன்றாடம் காண்கிறேன். ஆனால், வாழ்க்கையில் ஒழுங்கமைவுகள் இடம் பெறுவதில்லை!

காலால் நடப்பது மட்டும் நடையன்று. தமிழ் வழக்கில் 'நடை' என்றால் ஒழுக்கம். இன்று காலால் நிலத்தில் நடப்போர் பலர் சமூக அமைப்பில் தலையால் தருக்கி நடக்கின்றனர். இறைவா! என்னைக் காப்பாற்று.

ஒழுங்கினைக் கற்றுத் தந்து ஒழுங்கமைவினை அன்றாட வாழ்க்கையில்-பணியில் ஏற்கும் படி அருள் செய்க. நன்றுடையானே! நன்னடை அருள் செய்க! கடமைகளைச் செய்வதில் கால நியதி ஒழுங்குகள், சிந்தனையில் ஒழுங்குகள், நடைமுறை வாழ்வில்-பணிகள் இயற்றுவதில் ஒழுங்குகள் அருளிச் செய்க!

காலத்தொடு நிற்றல் கடமைகளைச் செய்தல், எண்ணக் குவியல்களில் ஒழுங்கமைவுகள், உறவுகளில் ஒழுங்கமைவுகள்-அருளிச் செய்க!

ஒழுங்குகளின் பயனாகிய ஒழுக்கத்தினை அருள் செய்க! எம் உயிரினும் ஒழுக்கம் சிறந்ததெனக் கருதிப் பயின்றிடும் பாங்கினை அருள் பாலித்திடுக!