பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 23


என்னை உணர்த்தி நான் மனிதனாக வாழ அருள்க!

இறைவா, எந்தையே! நின் திருவடி போற்றி! இறைவா! "நான் யார்?" என்று ஆய்வு செய்தால் அல்லவா நான் உய்தி பெறலாம். நான் யார்? இந்த உடலா? உடலினும் வேறாய உயிரா? இல்லை, நானே கடவுளா? "நான்’ நானேதான்! எனக்குப் பெயர் "உயிர்” அல்லது "ஆன்மா” என்பது.

நான் என்றுமே உள்ளவன். எனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. நான் ஒரு அறிவுப் பொருள். எனக்குச் சுதந்தரம் உண்டு. என்னிடம் குறையும் உண்டு. நிறையும் உண்டு.

இறைவா, என்னைப்பார்! நான் என்பதற்குப் பொருள் கற்றுக்கொடு! நான் மரபால் உனக்கு மகன், தொண்டன் என்று உணர்த்துக. நீ என்னை அறிவில் வளர்த்திடுக! நான் உய்தி நெறியில் செல்ல ஆர்வப்படுத்துக.

இப்பிறப்பிலேயே இன்ப அன்பினை எய்திட அருள் செய்திடுக! இறைவா, அட்ட மாசித்திகளும் தா! ஆனால் அவை எனக்குத் துணையாக இருக்க நின் திருவடிக்காட் செய்யும் பேற்றினை அருள் செய்க!

இறைவா, நின் நிழலில் வாழும் நிலையினை அருள்க! நின் அருளில் திளைத்து வாழும் வாழ்க்கையை அருள் செய்க! நான்மனிதன்! மனிதனாகவே வாழ அருள் செய்க!