பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

345






நவம்பர் 24


இறைவா, நடுவுநிலை பிறழா நல்வாழ்வு பெற அருள்க!

இறைவா, நீலமணிமிடற்றினை உடையவனே! நின் தோழன் நம்பியாரூரரின் கண்களைப் பறித்த கண்ணுதல் பரம்பொருளே! இறைவா, என் வாழ்க்கையில் ஓரம்சாரும் தீய இயல்பு இருக்கிறது.

வன்கணாளர்கள் என் இதயத்தைப் பறித்து விடுகின்றனர். இறைவா! ஒரு தராசு கூட தன்நிலையில் இருக்கிறது. நானோ, என்னிலையில் இல்லை; இருக்க முடியவில்லை. இறைவா, என் பிழை பொறுத்தாட்கொள். நான் நடுவுநிலை பிறழ்தல் கூடாது.

இறைவா, நான் எனக்காகப் போராடினால் விலங்கிற்கும் எனக்கும் என்ன வேற்றுமை? நான் என் வாழ்நாள் முழுதும் மற்றவர்களுக்காகவே போராடுமாறு அருள் செய்க! வல்லாங்கு வாழ்வாரிடம் வாழ்விழந்து அல்லற்படும் சாதாரண மக்களுக்காகப் போராடும் தூய வாழ்க்கையை அருள் செய்க!

இறைவா, எந்தச் சூழ்நிலையிலும் நீதியின் பக்கமே நிற்கும் பெற்றிமையை அருள் செய்க, இறைவா, நீயே நீதி! இறைவா, என்னை அதிகாரம், செல்வம் இவை விலை கொள்ள முடியாவண்ணம் முறைபிறழா நடுவுநிலையில் நான் நிற்க அருள் செய்க!

இறைவா, இச்சைகள் மிகுதியும் நிறைந்த தற்சார்பான ஆசைகள் என் வாழ்க்கையின் சீலத்தை அரித்தழிக்கா வண்ணம் நடுவுநிலைமையை உயிரெனப் பற்றி ஒழுகும் பெற்றிமையை அருள் செய்க!

ஆதியே! அந்தமே! நடுவே! என் வாழ்க்கையின் பயனே! நான் ஒரு நடுவு நிலையினனாக நின் நீதியைச் சார்ந்தே வாழ்ந்திட அருள் செய்க!