பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 27


இறைவா, நல்ல தமிழில் வழிபாடு செய்கின்றோம்! எழுந்தருள்க!

இறைவா, புலித்தோல் உடுத்திய முதல்வா! உண்மையைச் சொல்! சமஸ்கிருதம், தமிழ்-இவ்விரண்டு மொழிகளில் எந்தமொழியைக் கேட்பதில் உனக்கு விருப்பம் அதிகம்?

இறைவா, நாடறிந்த ஓர் உண்மைக்குக் கேள்வியா என்று கேட்கிறாய்? ஆம், இறைவா! இன்று சிலர் சமஸ்கிருதம்தான் உனக்குரிய மொழி, தமிழ் அல்ல என்று கூறுகிறார்கள். வழக்காடுகிறார்கள். நீ உன் விருப்பத்தைச் சொல்லி வழக்கைத் தீர்த்து வைக்கக் கூடாதா?

நீ அன்று படிக்காசு கொடுத்துப் பைந்தமிழைக் கேட்டாய். பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெறுவதற்கு வைகை ஆற்றங்கரையில் மண் சுமந்தாய். சுந்தரரின் செந்தமிழுக்காகத் திருவாரூர்த் தெருவில் நடந்தாய்.

தமிழ் மந்திரத்தை எழுதி நெருப்பிலிட்ட ஏடு எரியவில்லை. வெள்ளத்தை எதிர் கொண்டு, கரை ஏறியது, ஆம், இறைவா! தமிழ், நீ விரும்பும் மொழி! இல்லை, இல்லை! தமிழே நீ! நீயே தமிழ்! என்ன இறைவா கூறுகிறாய்?

திருக்கோயில்களில் தமிழை அகற்றி, சமஸ்கிருதத்தை துழைத்ததால்தான் தமிழிருக்கும் இடம் தேடிப் போய் விட்டாயா அதனால்தான் உன்னைத் திருக்கோயிலில் தேடிப்பார்த்துவிட்டு, "கடவுள் இல்லை" என்று கூறுகிறார்களா?

இறைவா, எங்கள் தவறை மன்னித்து அருள்! நாங்கள் நல்ல தமிழில் வழிபாடு செய்கிறோம். இறைவா, திருக்கோயிலுக்கு வா! எழுந்தருளி வாழ்த்துக!