பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

25



ஜனவரி 9


கோபுரம் போல் என் வாழ்க்கை உயர அருள்க!


இறைவா, தஞ்சைப் பெருவுடையார் கோயில் கற்றுத் தரும் பாடத்தினை உணர்ந்தறியும் பேற்றினை அருள் செய்க! என் வாழ்க்கை, அந்தக் கோபுரத்தைப் போல உயர்தல் வேண்டும், ஆம்! இறைவா, அதுவே என்னுடைய விருப்பம். கோபுரம் உயர வேண்டுமானால் அடிப்படை மிக அகல மாகவும், ஆழமாகவும் போடவேண்டும். அது போல என் வாழ்க்கை, சமுதாயத்தை நோக்கி விரிந்ததாகவும், அன்பின் ஆழம்பட்டதாகவும் அமைய அருள் செய்க! அந்தக் கோபுரத் தின் உச்சி - கலசத்தின் நிழல் பூமியில் விழாது!

இறைவா, வாழ்க்கையின் உச்சி செல்வம், கலசம் புகழ்! இவை என்மேல்-என்னைச் சுற்றியிருப்பவர்கள் மேல் நிழலாக விழுந்துவிடக்கூடாது! ஆம், இறைவா! என்னைச் செல்வத்தாலும் புகழாலும் வரும் செருக்கிலிருந்து காப்பாற்று. வாழ்க்கையின் வெற்றிக்குரிய ஆழமான அன்பினை அருளிச் செய்க! உயரிய குறிக்கோளினை ஏற்று வாழ்ந்திட அருள் பாலித்திடுக! சமுதாய மனிதனாக்கிவிடு. செல்வமும் புகழும் என்னைக் கெடுத்திடா வண்ணம் அடக்கத்தினைப் பொருளாகக்கொள்ளும் நெறியில் நிறுத்துக. இறைவா, அருள் செய்க!