பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 7



நிறை காணும் பண்பை எனக்கு வழங்குக!

இறைவா, எந்த ஒன்றிலும் குறை காண முடியும். யார் மீதும் குறை காண இயலும். இதனால் என்ன நன்மை? “நிறையில்லாதவர் கண்களுக்கே குறை தென்படும்” என் ஆப்தமொழி நினைவிற்கு வருகிறது.

குறை-குற்றங்கள் காணல் எளிது; துாற்றுதல் எளிது. நிறை காணல் அரிய முயற்சி. நிறை காணும் முயற்சியிலேயே அன்பு வளரும். உறவு வளரும். இறைவா, இந்த இனிய நிறை காணும் பண்பை எவ்விடத்தும் காணோமே?

இறைவா, என் மனம் ஏன் ஆத்திரப்படுகின்றது? அலமருகிறது? மற்றவர்கள் குறை காண்பதில்தானே சுறு சுறுப்பு. குறையை மறந்து நிறை காண முயன்றால் அது எனக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நல்லது.

இறைவா, நிறைகாணும் பண்பை எனக்கு வழங்கு! குறைகளைக் கடந்ததே நிறை! அன்பு: ஆர்வம்! நட்பு! அமைதி!

இறைவா! உண்மைக்கு மட்டும் விசுவாசமாக இருந்தால் போதாது. ஒருவரிடம் கொண்ட நட்புக்கும் உறவுக்கும் கூட விசுவாசமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உண்மையிடம் விசுவாசம்.

இறைவா! உறவே முதல்-முடிவு எல்லாம்! இறைவா, நட்பு செய்யும் பாங்கினை அருள் செய்க! நிறைகாணும் பண்பை அருள் செய்க!