பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

359





டிசம்பர் 8



ஆற்றலில் சிக்கனம் வேண்டும்! இறைவா, அருள்க!

இறைவா, என்னுடைய சேமநிதியே! நான் விரும்பும் துன்பத் தொடக்கிலாத சமுதாய அமைப்பைக் காண, உன் அருளால் வளர்த்துக் கொண்டுள்ளேன். நான் இன்று ஆற்றலுடையேன். ஆயினும் போதாது.

இறைவா, என்னுடைய பெருகி வளர்ந்த ஆற்றலை ஒருமுகப்படுத்தவில்லை. வெள்ளம் போன போக்குப் போல என் ஆற்றல் போய்க் கொண்டிருக்கிறது. என் ஆற்றல் ஒருமுகப்படுத்தப் படவில்லை! ஆதலால், ஆற்றல் இருந்தும் ஆற்றல் இல்லை என்பது போலாயிற்று!.

இறைவா, நான் என்ன செய்ய வேண்டி விரும்பிச் செய்கிறேன் இல்லை. தொல்லை தாங்க முடியவில்லை. இறைவா, நன்றருளிச் செய்தனை! என் ஆற்றலை ஒருமுகப் படுத்தச் சொல்கிறாய். நான் முயற்சி செய்கிறேன்.

எனக்குக் கொஞ்ச நாளாகவே பேச விருப்பமில்லை. இறைவா, இனிப் பேசாமல் குறிக்கோளை அடையும் வரையில் மெளனமாக இருந்து விடலாமா என்று கூட எண்ணம் வருகிறது.

ஆம், இறைவா, நீ அருளிச் செய்வது உண்மை! என் ஆற்றல் செய்ய வேண்டிய செயல்களுக்காக மிச்சப்படுத்தப் பெறுதல் வேண்டும். இறைவா, நான் இன்று முதல் சிக்கனத்தை என் ஆற்றலில் காட்டி என் ஆற்றலினை நான் ஏற்றுக் கொண்டுள்ள பணியில் ஈடுபடுத்த அருள் செய்க!

சிக்கனம் ஆற்றலில், பேச்சில், காலத்தில், செல்வத்தில் வேண்டும்! அச் சிக்கனத்தை என் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள் செய்க!