பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

55




பிப்ரவரி 8


இறைவா, மதமெனும் சுழலில் சிக்கித் தவிக்காதிருக்க அருள் செய்!


இறைவா, உண்மையைச் சொல். உன் பெயர் என்ன? உருவம் என்ன? இறைவா, நீ உண்மையை உணர்த்தி விட்டால் இந்த உலகில் வாழும் மதத்தலைவர்கள், புரோகிதர்கள் என்னை அலைக்கழிக்க முடியாது. இறைவா, என்மீது கருணை காட்டு! உன்னை அறியும் அறிவைத் தா. இறைவா, என்ன சொல்கிறாய்? எல்லாம் நீ தானா?

இந்த ஏழை உயிர்கள் விரும்பி அழைக்கும் பெயரே, உன் பெயர். இறைவா, இந்த ஏழைமக்கள் அன்பினால் அரற்றி அழைக்கும் பெயர்களே உன் பெயர்கள் அப்படியா? அப்படியானால் எந்த மதம் உன் மதம்? இறைவா..! இறைவா..! என்ன சொல்கிறாய்! மதங்களே உனக்குப் பிடிக்காதா? ஆம், இறைவா! உண்மைதான். மதமென்னும் பேய் மக்களைப் பிடித்தாட்டும் பொழுதுதான் அன்பை இழக்கின்றனர்; உறவுகளைப் பகையாக்கிக் கொள்கின்றனர். ஒருமைப்பாட்டை இழக்கின்றனர். உன்னை மறக்கின்றனர். இறைவா, என்னைக் காப்பாற்று. ஆம் இறைவா! மதமெனும் சுழலில் சிக்கித் தவிக்காமல் நின்னையே நினைத்து நினைத்து வாழ்ந்திடும் அருளினைச் செய்!