பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பிப்ரவரி 13


வேலியைத் தாண்டி வெளியில் வந்தருள்க!


இறைவா! உன்னுடைய எளிமை, பொதுமை, கருணை அளப்பரியன. ஆயினும் என்ன பயன்? வேலியே போட்டுப் பழகும் மானிட சாதிக்குள் சிக்கிவிட்டாய். அவர்கள் உனக்குச் சாதி, குலம், இனம், மொழி, சமயம் ஆகிய வேலிகளை வைத்து நான் எளிதில் காணமுடியாமல் தடுத்து விட்டார்களே !

இறைவா, ஏன் இந்த நிலை? என்னால் வேலிகளைக் கடந்து வரமுடியவில்லை. வந்தாலும் அவர்கள் விட மாட்டார்கள்! நீயே வேலியைத் தாண்டி வெளியே வா. உன்னைப் பார்த்து ஒரு அழுகை அழுவதற்குச் சந்தர்ப்பம் கொடு. அன்று ஆரூரருக்காக நீ தெருவில் நடக்கவில்லையா? மாணிக்கவாசகரின் பண்சுமந்த பாடலுக்காக நீ மண் சுமக்க வில்லையா? இன்று ஏன் என்னை அந்நியனைப்போல நடத்துகிறாய்? நான் வெளியே என்றால் நீ திருக்கோயிலின் உள்ளே இருக்க என்ன நியாயம்?

இறைவா, என் மனம் நீ இருக்கத்தக்க திருக்கோயில், என் மனத்தைக் கோயிலாக்கியுள்ளேன். இறைவா விரைந்து எழுந்தருள்க! பொய்யான ஆசாரங்களைக் கடந்து என்னை ஆட்கொள்க!