பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பிப்ரவரி 21


பொருளற்ற பொக்கையானேன்! எடுத்தாள்க இறைவா!


இறைவா! இந்தத் தடவை மட்டும் மன்னித்துவிடு என்று எத்தனை தடவை உன்னிடம் மன்றாடிக் கேட்டிருப்பேன்; எத்தனை தடவை நீயும் மன்னித்தாய்! ஆனால், நான் எழுந்து நடப்பதாகத் தெரியவில்லையே. மன்னிப்பு, பொருளற்றுப் போயிற்றே. இறைவா, பொருளற்ற பொக்கையானேன். எடுத்தாள்க!

நான் என்ன செய்ய? நீ என்னைத் தனியாய் படைத்திருந்தால் எப்படியோ? ஐவரோடு கூட்டுவைத்து அனுப்பினாய். அவர்கள் வலியராகி என்னோடு போராடுகிறார்கள். அவர்களுடன் போராடும் ஆற்றல் இல்லாமல் அவர்களுடன் சமரசம் செய்துகொண்டு வாழ்கிறேன். எல்லாம் உன்னால் வந்ததுதான். நன்றே செய்வாய் பிழை செய்வாய்! அடித்து அடித்து அக்காரம் தீற்று. நினைக் கண்டறியும் அறிவினைத் தந்தருள் செய்க!